வீராணம் ஏரி நீர் திறப்பது அதிகரிப்பு.

வியாழன், 27 நவம்பர் 2008 (11:40 IST)
சிதம்பரம்: நிஷா புயல் காரணமாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஏரியிலிருந்து விநாடிக்கு செவ்வாய் கிழமை முதல் 3,133 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

அத்துடன், காட்டாறுகளிலிருந்து மணவாய்க்கால் வழியாக சுமார் 8 ஆயிரம் கன அடி நீர் வெள்ளியங்கால் ஓடையில் கலந்து பழைய கொள்ளிடத்தில் கலக்கிறது.

இதனால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறு வருவாய்த் துறை அறிவித்துள்ளது

வீராணம் ஏரியில் 45 அடி (அதிகபட்ச உயரம் 47.5 அடி) நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. வீராணம் ஏரிக்கு செங்கால்ஓடை, பாளையங்கோட்டை ஓடை, பாப்பாக்குடிஓடை உள்ளிட்டவை வழியாக விநாடிக்கு சுமார் 2,300 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடையில் விநாடிக்கு 2,476 கன அடியும், வெள்ளாற்றில் 581 கன அடியும், சென்னை குடிநீருக்கு 76 கன அடி திறந்து விடப்படுகிறது.

இத்துடன் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலிருந்து வரும் மழைநீர் வடக்குராஜன் வாய்க்கால், வடவாற்றின் வழியாக கூடுதலாக வரும் நீர் மணவாய்க்கால் வழியாக காட்டுமன்னார்கோவில் அருகே திருநாரையூரில் வெள்ளியங்கால்ஓடையில் எட்டு ஆயிரம் கன அடி நீர் கலந்து பழைய கொள்ளிடத்தில் வெளியேறுகிறது.

இதனால் திருநாரையூர், சிறகிழந்தநல்லூர், எடையார், ஆழங்காத்தான், நந்திமங்கலம், நடுதிட்டு, முள்ளங்குடி உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

காட்டுமன்னார்கோவில் அருகே வீராணந்தபுரம் என்னுமிடத்தில் வெண்ணங்குழி ஓடையில் உடைப்பு எடுத்து சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சாலையில் உடைப்பெடுத்ததால் அவ்வழியே செல்லும் போக்குவரத்து திங்கள்கிழமை இரவு முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

வெண்ணங்குழி ஓடையில் உடைப்பு எடுத்ததால் சித்தமல்லி, அகரபுத்தூர், கண்டமங்கலம், வீராணந்தபுரம் உள்ளிட்ட 10 கிராமங்களில் நீர் புகுந்து வெளியேறுகிறது. மேலும் அக்கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

சிதம்பரம் அருகே உள்ள நாகச்சேரி குளம், ஓமக்குளம், நாஞ்சலூர், சிவாயம், நந்திமங்கலம், குமராட்சி. திருநாரையூர், பழையக் கொள்ளிடம், வேளக்குடி, அகரநல்லூர், பழையநல்லூர், ஜெயங்கொண்டப்பட்டினம், வல்லம்படுகை ஆகிய பகுதிகளை அரசு அதிகாரிகள் பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்