வளரும் நாடுகளுக்கு அந்நியச் செலாவணி வரத்து அதிகரிக்கும்: உலக வங்கி

புதன், 10 நவம்பர் 2010 (14:24 IST)
இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் இருந்து சென்று அயல் நாடுகளில் பணியாற்றிவருவோர் தங்கள் நாட்டிற்கு அனுப்பும் அந்நியச் செலாவணி இந்த ஆண்டில் 350 பில்லியனாக உயரும் என்று உலக வங்கி கூறியுள்ளது.

உலகளாவிய அளவில் பொருளாதாரப் பின்னடைவு வேலை வாய்ப்பை பெருமளவிற்குப் பாதித்ததாலும், வளரும் நாடுகளின் பணியாளர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணி அளவு குறையாது என்றும், அது அடுத்த இரண்டு ஆண்டுகளில் 370 பில்லியன் டாலர்களாக உயரும் என்று உலக வங்கியின் இடம்பெயர்ந்தோர் மற்றும் வருவாய் அனுப்புவோர் தகவல் புள்ளிவிவர அறிக்கை 2011இல் இந்த விவரங்கள் வெளியிட்டப்பட்டுள்ளது.

வளரும் நாடுகளையும் உள்ளடக்கிய உலகளாவிய அளவில் இந்தத் தொகை இந்த ஆண்டின் இறுதியில் 440 பில்லியனாக அதிகரிக்கும் என்று இந்த புள்ளி விவர அறிக்கையை வெளியிட்ட உலக வங்கியின் இடம்பெயர்ந்தோர் துறை மேலாளர் திலிப் ராதா கூறியுள்ளார்.

உள்நாட்டில் ஏற்பட்டுள்ள வேலை வாய்ப்பு இழப்பை கருத்தில்கொண்டு சில நாடுகள் அயல் நாட்டு பணியாளர்கள் எண்ணிக்கையை குறைக்கலாம். இதோடு நாணய மதிப்பீடும் இணைந்து அந்நிய செலாவணி வருகையை பாதிக்கும் சாத்தியமும் உள்ளதென்று உலக வங்கி கூறியுள்ளது.

செல்பேசிகளின் வாயிலாக தங்கள் நாடுகளுக்கு பணம் அனுப்புவதில் உள்ள ஆபத்துக்களை கருத்தில் கொண்டு, அப்படிப்பட்ட பரிவர்த்தனைகளை முறைபடுத்த வேண்டும் என்று உலக நாடுகளை உலக வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

உலக வங்கி வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின்படி. அயல் நாடுகளில் பணி செய்து நாட்டிற்கு அதிகம் அனுப்பும் நாடுகளின் பட்டியலில் இந்தியா, சீனா, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், பிரான்ஸ் ஆகியன முன்னணியில் உள்ளன.

அதிகமாக அயல் நாட்டுப் பணியாளர்களை ஈர்க்கும் நாடுகளாக கட்டார் (அதன் மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் 87 விழுக்காடு பணியாளர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது), மொனாக்கோ (72%), ஐக்கிய அரபுக் குடியரசு நாடுகள் (70%), குவெய்த் (69%), அண்டோரா (64%) உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்