வர்த்தக சமமின்மை: வென் ஜியாபாவோ - மன்மோகன் பேச்சு

வெள்ளி, 18 நவம்பர் 2011 (17:48 IST)
இந்தியா - சீனா இடையிலான இரு தரப்பு வர்த்தகத்தில் நிலவும் சமமின்மையை நீக்குவது பற்றி அந்நாட்டுப் பிரதமர் வென் ஜியாபாவோவுடன் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்தோனேசியத் தலைநகரில் நடைபெற்றுவரும் ஆசியான், கிழக்காசிய மாநாட்டில் கலந்துகொண்ட இரு தலைவர்களும் தனியே சந்தித்துப் பேசியபோது, சீனாவின் ஏற்றுமதிக்கு இணையாக இந்தியாவின் ஏற்றுமதிக்கு சீனா அனுமதிப்பதே இந்த சமமின்மையை போக்குவதற்கான வழி என்று மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவிற்கும், சீனத்திற்கு இடையிலான இரு தரப்பு வர்த்தகம் 2010ஆம் ஆண்டில் 60 பில்லியன் டாலர்களாக இருந்துள்ளது. இது இந்த ஆண்டில் 70 பில்லியன் டாலர்களாகவும், 2015ஆம் ஆண்டில் 100 பில்லியன் டாலர்களாக உயரும் என்றும் கூறப்படுகிறது.

2010ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி, சீனா 40 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவின் ஏற்றுமதியோ 20 பில்லியன் டாலர்களாக மட்டுமே உள்ளது. இந்தியாவில் இருந்து சேவைத் துறைகளை சீனா அனுமதிப்பதில்லை, இதனால்தான் இந்த வர்த்தக சமமின்மை நிலவுகிறது என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்