யூலிப் பாலிசி முறைப்படுத்த நெறிமுறைகள்: பிரணாப் முகர்ஜி அறிவிப்பு

புதன், 1 செப்டம்பர் 2010 (20:35 IST)
பங்குச் சந்தையில் முதலீடு செய்வதுடன் இணைக்கப்பட்ட யூலிப் காப்பீடு திட்டங்களை (Unit Linked Insurance Policy - ULIP) பயனாளர்களுக்கு சாதகமான வகையில் முறைப்படுத்தும் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

காப்பீடு திட்டங்களை முறைபடுத்தும் ஒழுங்குமுறை ஆணையம் (Insurance Regulatory Development Authority - IRDA), யூலிப் காப்பீடு திட்டங்களில் பயனாளர்களின் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நெறிமுறைகளை வகுத்துள்ளது என்று கூறிய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இன்று முதல் அந்த நெறிமுறைகள் நடைமுறைக்கு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

யூலிப் பாலிசிகளில் பல்வேறு தலைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் இன்று நடைமுறைக்கு வந்துள்ள நெறிமுறைகளில் இரத்து செய்யப்பட்டுள்ளது மட்டுமின்றி, குறைந்தபட்ச வருவாய் உறுதியளிக்கப்பட வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, யூலிப் காப்பீடு திட்டத்தை இடையில் முடித்துக் கொண்டாலும் முழு தொகையும் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. இதுவரை காப்பீடு திட்டத்தை இடையில் முடித்துக் கொண்டால் முழு தொகையும் இழக்க வேண்டியதாக இருந்தது.

யூலிப் காப்பீடு திட்டங்களில் பல்வேறு தலைகளில் நிறுவனங்கள் கபளீகரம் செய்யும் கட்டணங்கள் மக்களை பெரிதும் பாதித்ததையடுத்து இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்