மஞ்சள் ஏற்றுமதி அதிகரிப்பு

செவ்வாய், 29 செப்டம்பர் 2009 (15:53 IST)
மஞ்சள் உற்பத்தியாகும் மற்ற நாடுகளில் ஏற்றுமதி குறைந்ததால், இந்தியாவில் இருந்து மஞ்சள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் மற்ற மசாலா பொருட்களின் ஏற்றுமதி குறைந்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா உட்பட பல நாடுகளில் பொருளாதார நெருக்கடியால், தனிநபர் வருவாய் குறைந்ததுடன், தனிநபர் செலவிடுவதும் குறைந்துள்ளது. இதனால் மசாலா (நறுமண பொருட்கள்) பொருட்கள் ஏற்றுமதி குறைந்துள்ளது.

இந்த நிதி ஆண்டில், ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை ஐந்து மாத காலத்தில், மசாலா பொருட்களின் ஏற்றுமதி அளவின் அடிப்படையில் 10 விழுக்காடு குறைந்துள்ளது. இந்த ஐந்து மாதங்களில் மொத்தம் 2,01,410 டன் மசாலா பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

webdunia photo
WD
அதே நேரத்தில் மஞ்சள் 25,500 டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 165.68 கோடி ( சென்ற நிதி ஆண்டு இதே ஐந்து மாதங்களில் 24,875 டன். மதிப்பு ரூ.109.64 கோடி). இந்த வருடம் ஏற்றுமதி செய்யப்பட்ட மஞ்சளுக்கு அதிக விலை அதிக விலை கிடைத்துள்ளது. சராசரியாக 1 கிலோ மஞ்சளுக்கு ரூ.64.97 பைசா கிடைத்துள்ளது. ( சென்ற வருடம் கிலோ ரூ. 44.08).

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு குடியரசுக்கு 5,910 டன், ஈரானுக்கு 5,335 டன், வங்கதேசம் 4,595 டன், மலேசியா 4,825 டன், ஜப்பான் 3,090 டன் ஏற்றுமதியாகி உள்ளன.

சர்வதேச மஞ்சள் சந்தையில், இந்தியாவின் பங்கு 60 விழுக்காடாக உள்ளது. வியட்நாம், இந்தோனிஷியா, மியான்மர் ஆகிய நாடுகளும் மஞ்சள் ஏற்றுமதி செய்கின்றன.

இந்த வருடம் 3,38,000 டன் மஞ்சள் உற்பத்தியாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் உள்நாட்டில் 3 முதல் மூன்றரை லட்சம் டன் பயன்படுத்தப்படும். அயல்நாடுகளுக்கு 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் டன் வரை ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்