பாகிஸ்தான் இறக்குமதி தடை பொருட்களை அறிவிக்க வேண்டும்

செவ்வாய், 18 மே 2010 (15:15 IST)
இந்தியாவில் இருந்து எந்தெந்த பொருட்களை இறக்குமதி செய்ய விரும்பவில்லை என்பதை தெளிவாக தெரிவிக்கும்படி பாகிஸ்தானிடம் இந்தியா கூறியுள்ளதாக பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே வர்த்தகத்தை அதிகரிக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இரு நாடுகளும் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி, தீர்வை போன்றவைகளில் சலுகை வழங்குகின்றன.

அத்துடன் சாலை, ரயில் மூலமும் சரக்கு போக்குவரத்து நிகழ்கிறது.

தற்போது இந்தியாவில் இருந்து எந்த எந்த பொருட்களை இறக்குமதி செய்யலாம் என்ற அட்டவணையை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு இறக்குமதி அனுமதி அட்டவணை முதன் முதலில் வெளியிடப்பட்டது. அப்போது இதில் 773 வகை பொருட்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தன. இவை படிப்படியாக அதிகரித்து 2009 ஆம் ஆண்டில் 1,943 பொருட்களாக அதிகரித்தது.

ஆனால் இறக்கமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்கள் பற்றி தெளிவாக பாகிஸ்தான் அறிவிக்கவில்லை. இதனால் இந்திய வர்த்தகர்கள் ஏற்றுமதி செய்யவதில் சிரமம் ஏற்படுகிறது.

இந்நிலையில் இந்திய தொழில் கூட்டமைப்பு, டைம் ஆப் இந்தியா, மற்றொரு செய்தி பத்திரிக்கை வெளியீட்டாளர்களான ஜங் குழுமம் ஆகியோர் இணைந்து நடத்திய இந்திய-பாகிஸ்தான் வர்த்தக கருத்தரங்கை நடத்தினார்கள். இதில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசுகையில், இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்று பலமாக நினைக்கின்றேன். தற்போது பாகிஸ்தான் அனுமதிக்கப்பட்ட பொருட்களுக்கு பதிலாக, எந்தெந்த பொருட்கள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளன என்று பாகிஸ்தான் அறிவிக்க வேண்டும். இதன் மூலம் பாகிஸ்தான் இறக்குமதி செய்ய அனுமதித்து உள்ள பொருட்கள் பற்றி தெளிவாக தெரிய வரும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்