நஷ்டஈடு வழங்கினால் நிலம் திருப்பி கொடுக்க தயார்-ரத்தன் டாடா

செவ்வாய், 1 செப்டம்பர் 2009 (17:11 IST)
மேற்கு வங்க மாநில அரசு நஷ்ட ஈடு கொடுத்தால், சிங்கூரில் உள்ள நிலத்தை திருப்பி கொடுக்க தயார் என்று ரத்தன் டாடா தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் சிங்கூர் என்ற ஊரில் டாடா மோட்டார் நிறுவனம் நானோ ரக கார் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க, அம்மாநில அரசு 997 ஏக்கர் நிலம் வழங்கியது.

விவசாயிகளிடம் இருந்து விளை நிலங்களை கட்டாயப்படுத்தி மாநில அரசு பிடுங்கிக் கொண்டதாகவும், விளை நிலத்தை விவசாயிகளுக்கு திருப்பி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கடுமையாக போராட்டம் நடத்தினார்கள். இதற்கு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் பகிரங்க ஆதரவு தெரிவித்ததுடன், களத்தில் இறங்கியும் போராடியது. பல வாரங்கள் நடந்த இந்த போராட்டத்தால், டாடா மோட்டார் நிறுவனம் நானோ கார் தொழிற்சாலையை குஜராத் மாநிலத்தில் சநானந்த் என்ற இடத்திற்கு மாற்றுவதாக அறிவித்தது.

இந்நிலையில் இன்று கொல்கத்தாவில் டாடா டீ நிறுவனத்தின் பங்குதாரர்களின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த டாடா குழுமத்தின் சேர்மன் ரத்தன் டாடா செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் அந்த நிலத்தை வைத்துக் கொள்ள விரும்பவில்லை. மாநில அரசு நாங்கள் செய்த முதலீட்டிற்கு உரிய நஷ்டஈடு வழங்கினால், நிலத்தை திரும்ப ஒப்படைக்க தயாராக இருக்கின்றோம் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்