டீசல், எரிவாயு விலையேற்றம்: அமைச்சரவை இம்மாதம் கூடும்

புதன், 2 நவம்பர் 2011 (15:22 IST)
மத்திய அரசின் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு கடும் இழப்பு ஏற்படுவதால், டீசல், சமையல் எரிவாயு உருளை, மண்ணெண்ணை ஆகியவற்றின் விலைகளை கூட்டுவது தொடர்பாக முடிவு எடுக்க அதிகாரமிக்க அமைச்சரவைக் கூட்டம் இம்மாத இறுதிக்குள் கூடும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு (Empowered Group of Ministers - EGoM), எரிபொருட்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் என்று கூறியுள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா விலை உயர்ந்துவருவதன் காரணமாகவும், டீசல், சமையல் எரிவாயு உருளை, மண்ணெண்ணை ஆகியவற்றிற்கு அளித்துவரும் மானியம் காரணமாகவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுவரும் இழப்பு இந்த நிதியாண்டில் 1,30,000 கோடியாக உயரும் என்று மதிப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறியுள்ளார்.

“எண்ணெய் நிறுவனங்கள் இலாபக் கணக்கு காட்டுவதற்குக் காரணம், இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு வழங்கிவரும் மானியமே. இந்த நிதியாண்டில் முதல் காலாண்டில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட நிதியமைச்சகம் ரூ.15,000 கோடி மானியம் வழங்கியது” என்று ஜெய்பால் ரெட்டி கூறியுள்ளார்.

எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை காரணம் காட்டி, டீசல் விலையின் மீதான மத்திய அரசின் கட்டுப்பாட்டை நீக்குவது தொடர்பாகவும், சமையல் எரிவாயு உருளைகளை ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டு ஒன்றிற்கு 2 முதல் 3 உருளைகளை மட்டுமே அளிப்பது என்றும், அதற்கு மேலும் தேவைப்பட்டால் பொது சந்தை விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்யவதற்கே அதிகாரமிக்க அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்