ஜூலை 2009ல் ஏற்றுமதி 19% குறைவு

செவ்வாய், 1 செப்டம்பர் 2009 (19:52 IST)
இந்தியாவின் ஏற்றுமதி அளவு ஜூலை 2009ல் ரூ.66,041 கோடியாக இருந்தது என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 19 சதவிகிதம் குறைவாகும்.

இதுகுறித்து மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2009 ஜூலை மாதத்தில் ஏற்றுமதியின் அளவு ரூ.66,041 கோடியாக உள்ளது. கடந்த 2008 ஜூலை மாதத்தில் இருந்த ஏற்றுமதி அளவான ரூ.81,548 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 19 சதவிகிதம் குறைவாகும். ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான மொத்த ஏற்றுமதி மதிப்பு ரூ.2,41,735 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் மொத்த ஏற்றுமதி அளவான ரூ.3,15,978 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 23.5 சதவிகிதம் குறைவு.

ஜூலை 2009ல் இந்தியாவின் இறக்குமதி ரூ.95,118 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தின் இறக்குமதி அளவான ரூ,1,33,609 கோடியுடன் ஒப்பிடுகையில் 28.8 சதவிகிதம் குறைவாகும். ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான ஒட்டுமொத்த இறக்குமதி மதிப்பு ரூ.3,82,422 கோடி. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21.7 சதவிகிதம் குறைவு. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் இறக்குமதியின் மதிப்பு ரூ.4,88,668 ஆகும்.

ஜூலை மாதத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி அளவு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 55.5 சதவிகிதம் குறைந்து 5,638 மில்லியன் டாலராக உள்ளது. ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான மொத்த இறக்குமதி முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 48 சதவிகிதம் குறைந்து 21964 மில்லியன் டாலராக உள்ளது.

எண்ணெய் அல்லாத இறக்குமதிகளின் அளவு 24.5 சதவிகிதம் குறைந்து 13,983 மில்லியன் டாலராக உள்ளது. ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான எண்ணெய் அல்லாத இறக்குமதி மதிப்பு 23.7 சதவிகிதம் குறைந்து 56,600 மில்லியன் டாலராக உள்ளது.

வர்த்தக பற்றாக்குறை ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் 28,913 மில்லியன் டாலராக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 41,093 மில்லியன் டாலராக இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்