சூரிய சக்தி பம்ப் செட்டுகளுக்கு மானியத்தை அதிகரிக்க வேண்டும்- பஞ்சாப் அரசு

செவ்வாய், 29 செப்டம்பர் 2009 (13:10 IST)
சண்டீகர்: சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட்டுகளுக்கு வழங்கப்படும் மானியத்தை அதிகரிக்க வேண்டும். 1 வாட் மின்சார திறனுக்கு மானியத்தை ரூ.30 இல் இருந்து ரூ.100 ஆக அதிகரிக்க வேண்டும் என்று பஞ்சாப் மாநில அரசு மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது.


விவசாயிகள் மின்சாரத்தில் இயங்கும் பம்ப் செட்டுகளுக்கு மாற்றாக சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது. இதே போல் மற்ற உபயோகங்களுக்கும் மின்சார பம்பு செட்டுகளுக்கு பதிலாக சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட்டுகள் பயன்படுத்துவதை அரசு ஊக்குவிக்கிறது

சூரிய சக்தியை கொண்டு தாயரிக்கும் மின்சாரத்திற்கு தற்போது 1 வாட் அளவிற்கு ரூ.30 மானியம் வழங்கப்படுகிறது. இதை ரூ.100 ஆக அதிகரிக்க வேண்டும் என்று பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல், மத்திய புதுப்பிக்க மற்றும் மரபுசாரா எரிசக்தி அமைச்சர் பரூக் அப்துல்லாவிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் தான் அதிக அளவு சூரியசக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் நிறுவப்பட்டுள்ளன.

PR photo
PR
20010-04 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசின் உதவியுடன் 1850 சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட்டுகள் நிறுவப்பட்டன. விவசாய பணிகளுக்காக பம்ப் செட்டுகளை நிறுவுவதற்கு 2 குதிரை சக்தி கொண்ட பம்ப் செட்டுகளுக்கு ரூ.1.80 லட்சம் முதல் ரூ.2.43 லட்சம் மானியமாக வழங்கியது.

தற்போது இந்த மானியம் ரூ.50 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு விவசாயிகள் சூரியசக்தி பம்ப் செட்டுகளை பொருத்துவது இயலாமல் போயுள்ளது. இந்த நிலை பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமில்லாமல், எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும்.

சூரியஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்க பயன்படும் போட்டோவலாடிக் செல்களின் விலை சர்வதேச அளவில் அதிகரித்து வருகிறது. இதனால் சூரியசக்தியால் இயங்கும் பம்ப் செட்டுகளை நிறுவுவதற்கு கூடுதல் செலவாகிறது. இந்நிலையில் இதற்கு வழங்கப்பட்டு வந்த மானியம் 50 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.

முன்பு 1900 வாட் சக்தியில் இயங்கும் பம்ப் செட்டுகளை நிறுவ ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் செலவாகும். இது தற்போது ரூ.4 லட்சமாக அதிகரித்துள்ளது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக பஞ்சாபில் எந்த சூரியசக்தி பம்ப் செட்டும் அமைக்கப்படவில்லை.

மத்திய அரசு நவம்பர் 14 ஆம் தேதி புதிய சூரியசக்தி கொள்கை அறிவிக்க உள்ளது. இதில் மானியம் அதிகரிக்க வேண்டும்.

குடியிருப்புகளுக்கு தேவைப்படும் மின்சாரத்தை சூரியசக்தியை கொண்டு உற்பத்தி செய்வதற்கு 25 மெகாவாட் மின் உற்பத்தி திறன் வரை மானியத்தை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.



வெப்துனியாவைப் படிக்கவும்