சிமென்ட் விற்பனை அதிகரிப்பு

செவ்வாய், 2 பிப்ரவரி 2010 (16:52 IST)
குடியிருப்புகள், உள்கட்டமைப்பு கட்டுமானம் நடைபெற துவங்கியுள்ளதால் சிமென்ட் விற்பனை அதிகரித்துள்ளது. அடுத்த வரும் மாதங்களிலும் சிமென்ட் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிகள் வீட்டு கடனுக்கு பல சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன. இதே போல் மத்திய மாநில அரசுகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களும் தொடங்கியுள்ளது. மந்தகதியில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பு, வணிக, அலுவலக வளாகங்கள் கட்டுமானப்பணியும் வேகம் பிடித்துள்ளது.

இதனால் ஜனவரி மாதத்தில் சிமென்ட் விற்பனை அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு ஜனவரி மாத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஜனவரியில் பல சிமென்ட் நிறுவனங்களின் விற்பனை 1 முதல் 38 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.

இது குறித்து ஸ்ரீ சிமென்ட் நிறுவனத்தினஅ மேலாண்மை இயக்குநர் ஹெச்.எம்.பங்கூர் கூறுகையில், அடுத்த வரும் மாதங்களில் விற்பனை அதிகரிக்கும். விலையிலும் மாற்றம் இல்லாமல் நிலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என்று தெரிவித்தார்.

ஜே.கே.லட்சுமி சிமென்ட் நிறுவனம் ஜனவரியில் 5.06 லட்சம் டன் சிமென்ட் விற்பனை செய்துள்ளது. இது சென்ற வருடம் ஜனவரியுடன் ஒப்பிடுகையில் 38 விழுக்காடு அதிகம்.

ஏ.சி.சி நிறுவனத்தின் விற்பனை 1 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது 19.1 லட்சம் டன் சிமென்ட் விற்பனை செய்துள்ளது.

அம்புஜா சிமென்ட் நிறுவனத்தின் விற்பனை 7.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது 17.5 லட்சம் டன் விற்பனை செய்துள்ளது.

பினானி சிமென்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வினோத் ஜீனிஜா கூறுகையில், சிமென்ட் உற்பத்தியும், தேவையும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சிமென்ட் தயாரிப்பதற்கான கச்சா பொருட்களின் விலை உயர்வால் இலாபம் குறைந்து வருகின்றது என்று தெரிவித்தார்.

மத்திய அரசு உள்கட்டுமானம், சாலை வசதி, மின் உற்பத்தி நிலையம் அமைத்தல், துறைமுக கட்டுமானம், வீட்டு வசதி போன்றவைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ததது. இதனால் இந்த நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சிமென்ட் விற்பனை தொடர்ந்து அதிகரித்தது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்