சந்தை விலைக்கே இயற்கை எரிவாயு-உஸ்பெக்.

புதன், 26 நவம்பர் 2008 (16:53 IST)
புதுடெல்லி: உஸ்பெக்கிஸ்தான் இயற்கை எரிவாயுவை சந்தை விலைக்கே விற்பனை செய்வதாக அறிவித்தது.

இயற்கை எரிவாயு போன்ற பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்யும் நாடுகள், தற்போது மற்ற நாடுகளுக்கு நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் இயற்கை எரிவாயுவை விற்பனை செய்கின்றன. இவை குறிப்பிட்ட காலத்திற்கு ஒப்பந்தம் செய்யும் போது, விலையை நிர்ணயிக்கின்றன.

இதன்படி சந்தையில் இயற்கை எரிவாயு விலை அதிகரித்தாலும் கூட, முன்பு நிர்ணயம் செய்த விலைக்கே, ஒப்பந்த காலம் முடியும் வரை விற்பனை செய்கின்றன.

இனி இவ்வாறு ஒப்பந்த விலைக்கு விற்பனை செய்யாமல், சந்தை விலைக்கே இயற்கை எரிவாயுவை விற்பனை செய்வதாக உஸ்பெக்கிஸ்தான் அறிவித்துள்ளது.

இந்த நாடு சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்த நாடாகும். இது ஆசியாவில் அமைந்துள்ளது.

புதுடெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா- சி.ஐ.எஸ் (காமன்வெல்த் ஆப் இன்டிபண்டன்ட் ஸ்டேட்ஸ்) இடையிலான கச்சா எண்ணெய் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியின் போது உஸ்பெக்கிஸ்தான் பெட்ரோலிய நிறுவனமான உஸ்பெக்நெப்டிகேஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஜீராபெக் முர்ஜமாக்தோவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரஷியாவைச் சேர்ந்த காஸ்புரோம் நிறுவனம் உட்பட, எல்லா நிறுவனங்களுக்கும், அடுத்த வருடம் முதல் இயற்கை எரிவாயு சந்தை விலைக்கே விற்பனை செய்யப்படும். அடுத்த வருடத்தில் இருந்து முன்னரே நிர்ணயித்த விலைக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது.

தற்போது ரஷியாவைச் சேர்ந்த காஸ்புரோம் நிறுவனத்திற்கு 13 பில்லியன் கன மீட்டர் இயற்கை எரிவாயு விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த வருடம் முதல் 14 பில்லியன் கன மீட்டராக அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

சி.ஐ.எஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் காமன் வெல்த் ஆப் இன்டிபண்டன்ட் ஸ்டேட்ஸ் என்பதில், சோவியத் ஒன்றியத்தில் இருந்து தனியாக பிரிந்து சென்ற 12 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இதில் ரஷியா, அர்மீனியா, அஜர்பைஜான், பெலாரஸ், ஜார்ஜியா, கஜகஸ்தான், கிரிகிஸ்தான், மால்டோவா, தஜகஸ்தான், உக்ரைன், உஸ்பெக்கிஸ்தான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்