கார் விற்பனை மே மாதத்திலும் சரிவு; பைக் விற்பனை உயர்வு

புதன், 12 ஜூன் 2013 (15:49 IST)
தொடர்ந்து 7வது மாதமாக மே மாதத்திலும் கார்கள் விற்பனை 12.26 சதவீதம் சரிந்தது. மோட்டார் சைக்கிள் விற்பனை சிறிதளவு உயர்ந்துள்ளது.
FILE

இது குறித்து இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்கம்(சியாம்) நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி இன்னும் மந்தமாகவே உள்ளது. தொடர்ந்து 7வது மாதமாக, மே மாதத்தில் கார்கள் விற்பனை 12.26 சதவீதம் சரிந்துள்ளது. இம்மாதத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 43,216 கார்கள் விற்பனையாயின. அதே சமயம், கடந்த ஆண்டு மே மாதத்தில் ஒரு லட்சத்து 63,222 கார்கள் விற்பனையாகியுள்ளன.

இதே போல், மோட்டார் பைக்குகளின் விற்பனையும் 0.72 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. மே மாதத்தில் 8 லட்சத்து 81,288 மோட்டார் பைக்குகள் விற்பனையாயின. இதுவே கடந்த ஆண்டு மே மாதத் தில் 8 லட்சத்து 87,646 பைக் விற்பனையாகியுள்ளது. அதே சமயம், மொத்த இரு சக்கர மோட்டார் வாகன விற்பனை 1.13 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது, மே மாதத்தில் 12 லட்சத்து 6,173 வாகனங்கள் விற்பனையாயின. கடந்த ஆண்டு மே மாதத்தில் விற்பனை 11 லட்சத்து 92,700 வாகனங்களாக இருந்தது.

வர்த்தக பயன்பாட்டுக்கான வாகனங்கள் விற்பனையும் மே மாதத்தில் 10.6 சதவீதம் குறைந்துள்ளது. மே மாதத் தில் 55,458 வாகனங்கள் விற்றுள்ளன. அதே சமயம், கடந்த ஆண்டு மே மாதத்தில் 62,032 வாகனங்கள் விற்றிருந்தது.அனைத்து வாகனங்களையும் சேர்த்து, மொத்த வாகன விற்பனையும் மே மாதத்தில் 0.93 சசதவீதம் சரிந்துள்ளது.

இம்மாதத்தில் மொத்தம் 14 லட்சத்து 98,909 வாகனங்கள் விற்றிருக்கின்றன. இதுவே கடந்த ஆண்டு இதே மாதத்தில் 15 லட்சத்து 12,986 வாகனங்கள் விற்றுள்ளன.இவ்வாறு சியாம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் டைரக்டர் ஜெனரல் விஷ்ணு மாத்தூர் கூறுகையில், ‘கடந்த 200809ல் வாகன விற்பனை மந்தமாக இருந்தது. ஆனாலும், இந்த அளவுக்கு தொடர்ந்து 7 மாதங்களாக விற்பனை சரியவில்லை.

இது ஆட்டோமொபைல் துறையை கவலையடையச் செய்துள்ளது. இதனால், முதல்கட்டமாக உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் தற்காலிக ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயமும் உள்ளது’ என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்