எஸ்.பி.ஐ : சலுகை வட்டியில் கார் கடன்

திங்கள், 29 ஜூன் 2009 (15:24 IST)
பாரத ஸ்டேட் வங்கி, கார் வாங்குவதற்காக வழங்கும் கடனுக்கு சலுகை வட்டி திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி முதல் வருடத்திற்கு 8 விழுக்காடு வட்டி வசூலிக்கப்படும். இரண்டாவது, மூன்றாவது வருடத்திற்கு 9 விழுக்காடு வட்டி வசூலிக்கப்படும். புதிய வட்டி திட்டம் ஜுலை 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.

இந்த வங்கியின் கடனுக்கான வட்டியை விட, கார் கடன்களுக்கு கால் முதல் முக்கால் விழுக்காடு வரை குறைந்த வட்டி விதிக்கப்படுகிறது.

இதன்படி 1 லட்சம் ரூபாயக்கு முதல் வருடம் மாதா மாதம் ரூ,1,559 திருப்பி செலுத்த வேண்டும். 2, மூன்றாம் வருடங்களில் மாத தவணையாக ரூ.1,647 திருப்பி செலுத்த வேண்டும். இந்த கடனுக்கு பரிசீலனை கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

பாரத ஸ்டேட் வங்கி, கடந்த ஒரு வருடத்தில் அதிகளவு கார் கடன் வழங்கியுள்ளது. இது தற்போது புதிய கார் வாங்க, அதிகளவு கடன் வழங்கும் வங்கியாக வளர்ந்துள்ளது.

மாருதி சுஜிகி, டாடா மோட்டார், ஹுன்டாய் மோட்டார் போன்ற கார் நிறுவனங்களுடன், கடன் வழங்குவதற்கான ஒப்பந்ததையும் செய்து கொண்டுள்ளது.

முன்பு கார் கடன்களை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஹெச்.டி.எப்.சி போன்ற வங்கிகள் அதிகளவு வழங்கின. தற்போது இந்த இடத்தை பொதுத்துறை வங்கிகள் பிடித்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்