உள்நாட்டு கணினிகளை வாங்கும் அரசின் முடிவுக்கு அமெரிக்கா எதிர்ப்பு

செவ்வாய், 5 பிப்ரவரி 2013 (13:30 IST)
FILE
லேப்டாப், கம்ப்யூட்டர், பிரின்டர், டேப்லெட் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்களை அரசு மற்றும் சார்பு நிறுவனங்கள் உள்நாட்டு தயாரிப்பாளர்களிடமே வாங்க கட்டாயமாக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்களை இணையதளங்களில் இணைக்கும் போது அதன் வழியாக அதிநவீன மென்பொருள்களைப் பயன்படுத்தி வெளிநாடுகள் ரகசியங்களை திருடுகின்றன. இந்தியாவிலிருந்து பல ரகசியங்கள் இதுபோல் திருடப்பட்டு வருகின்றன. இதற்கு உதவும் வகையில், வெளிநாட்டு நிறுவனங்களின் லேப்டாப்கள், கம்ப்யூட்டர்கள், பிரின்டர்கள், டேப்லெட்கள் போன்றவற்றில் சில மாற்றங்கள் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதை தடுக்கும் வகையில், அரசு மற்றும் சார்பு நிறுவனங்கள் இனி உள்நாட்டு தயாரிப்பாளர்களிடம் இருந்து மட்டுமே இந்த எலெக்ட்ரானிக் பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதேபோல் தனியார் நிறுவனங்களையும் கட்டாயப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதத்திலேயே வெளியானது.

முதல்கட்டமாக, அரசு நிறுவனங்களை கட்டாயப்படுத்தும் அரசாணையை மத்திய அரசு கடந்த வியாழக்கிழமை வெளியிட்டது. அதில் உள்நாட்டு தயாரிப்பாளர்களிடம் எலெக்ட்ரானிக் பொருட்களை வாங்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இத்திட்டத்துக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க பொருளாதார வளர்ச்சி மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் ராபர்ட் ஹார்மேட்ஸ் சமீபத்தில் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவை சந்தித்து பேசினார்.

அப்போது ராபர்ட் ஹார்மேட்ஸ் கூறுகையில், இந்தியாவின் உள்நாட்டு கொள்முதல் திட்டத்தால், அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகளவில் பாதிக்கப்படும். அமெரிக்க நிறுவனங்களின் முக்கிய வாடிக்கையாளர் இந்தியா. இங்கு தொழிற்சாலைகளை அமைக்கவும் எங்கள் நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில், இந்தியாவின் முடிவு அவற்றுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்