அயல் பணி மீதான வரிச் சலுகை நிறுத்தப்படும்: ஒபாமா மீண்டும் உறுதி

செவ்வாய், 21 செப்டம்பர் 2010 (13:26 IST)
FILE
அயல் நாடுகளுக்கு அளிக்கப்படும் வணிக அயல் பணிகள் (அவுட் சோர்சிங்) மூலம் கிடைக்கும் வருவாய்க்கு அமெரிக்க அரசு அளித்துவரும் வரிச் சலுகை நிறுத்தப்படும் என்று அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

வாஷிங்டனில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய ஒபாமா, இப்பிரச்சனையில் தனது நிலை தெளிவானது என்றும், உள்நாட்டில் வேலை வாய்ப்பு உரு்வாக்கும் முதலீட்ட்டாளர்களுக்கு மட்டுமே வரிச் சலுகை அளிக்கப்படு்ம் என்றும் கூறியுள்ளார்.

ஜார்ஜ் புஷ் காலத்தில் கடைபிடிக்கப்பட்டுவந்த கொள்கைகளை விமர்சித்த பராக் ஒபாமா, “நாம் அளித்த இரண்டு வரிச் சலுகைகளால் நமக்கு பயன் எதுவும் கிட்டவில்லை. நாம் நடத்திய இரண்டு போர்களுக்கு மிக அதிகமான நிதிச் செலவு ஆகிறது, அதை யாரும் ஈடுகட்டவில்லை. நலத் திட்டங்களுக்குத் தேவையான நிதியில்லாத காரணத்தினால், அத்திட்டத்தை நிறைவேற்ற முடியாத நிலையில், அதன் திட்டச் செலவு கூடிக் கொண்டே போகிறது” என்று அரசின் நிதி நெருக்கடியை விவரித்துள்ளார்.

அமெரிக்க நிறுவனங்கள் அயல் நாடுகளுக்கு அளித்துவரும் அயல் பணிகளை நிறுத்தினால் அதனால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும் நாடாக இந்தியா இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்