அமெரிக்க அதிபர் தேர்தல் செலவை இந்திய மக்களவைத் தேர்தல் விஞ்சும்

ஞாயிறு, 1 மார்ச் 2009 (18:42 IST)
இந்தியாவில் விரைவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்காக செலவிடப்படும் தொகை, அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவிட்ட தொகையை விஞ்சும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்டர் ஃபார் மீடியா ஸ்டடீஸ் என்ற (Centre for Media Studies) என்ற நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், வரும் மக்களவைத் தேர்தலுக்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவிடப்பட உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இது அமெரிக்க அதிபர் (2008-09) தேர்தலில் போட்டியிட்ட பராக் ஹுசைன் ஒபாமா உள்ளிட்ட வேட்பாளர்களால் செலவு செய்யப்பட்ட 1.8 பில்லியன் டாலர் (ரூ.8 ஆயிரம் கோடி) தொகையை விட சுமார் 2 ஆயிரம் கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் செலவிடப்பட்ட தொகை சுமார் ஓராண்டு காலத்தில் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்திய மக்களவைத் தேர்தலுக்காக செலவிடப்பட உள்ள ரூ.10 ஆயிரம் கோடி ஓரிரு மாதங்களில் செலவிடப்பட உள்ளது.

தேர்தலுக்காக செலவிடப்பட உள்ள ரூ.10 ஆயிரம் கோடியில் 25% பணம், வாக்காளர்களுக்கு வழங்குவது, சட்டத்திற்கு புறம்பாக செலவழிப்பது என அதிகாரப்பூர்வமற்ற முறையில் செலவிடப்படும் என்றும் அந்நிறுவனம் கணித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்