அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களின் முதலீடு 11 பில்லியன் டாலர்

திங்கள், 8 ஜூலை 2013 (13:30 IST)
FILE
அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களின் முதலீடு 11 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் ரூ.66,000 கோடி ஆகும்.

அமெரிக்காவில் இந்தியாவின் மென்பொருள் நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் பல கோடி ரூபாய் முதலீடு செய்து வருகின்றன. கடந்த 2010 ஆம் ஆண்டு அக்டோபரில், இந்த முதலீடு 5 பில்லியன் டாலராக ரூ.30,000 கோடி இருந்தது.

இதை அப்போது அமெரிக்காவின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் தெரிவித்திருந்தார். 2000 ஆம் ஆண்டில் வெறும் 200 மில்லியன் டாலராக இருந்த இந்திய நிறுவனங்களின் முதலீடு, 2010 ஆம் ஆண்டில் 5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்றும், இதன் மூலம் சுமார் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க இந்திய பிசினஸ் கவுன்சில் (யுஎஸ்ஐபிசி) ஒரு ஆய்வு நடத்தியது. இதில், அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களின் முதலீடு 11 பில்லியன் டாலரை எட்டியுள்ளதாகவும், இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் தொழில் வளர்ச்சிக்கு இந்திய நிறுவனங்களின் முதலீடுகள் மிகவும் முக்கியமானது என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

யுஎஸ்ஐபிசி 38வது ஆண்டு மாநாடு வரும் 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 'அமெரிக்காவில் இந்திய முதலீட்டால் ஏற்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு' என்ற தலைப்பில் ஆய்வறிக்கை வெளியிடப்பட உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவு வளர்ச்சிக்கான வழிமுறைகள் குறித்தும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்