அக். 1 முதல் அனைத்து எல்ஐசி பாலிசிகளுக்கும் சேவை வரி - ஐஆர்டிஏ

திங்கள், 30 செப்டம்பர் 2013 (15:19 IST)
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அனைத்து எல்ஐசி பாலிசிகளுக்கும் சேவை வரி விதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள பாலிசிகளிலும் சில மாற்றங்களை கொண்டு வர ஐஆர்டிஏ (இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம்) திட்டமிட்டுள்ளது.
FILE

இந்தியாவில் எல்ஐசி மற்றும் அனைத்து தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் ஐஆர்டிஏ கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வருகின்றன. தற்போது நடைமுறையில் உள்ள பாலிசிகளில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சில மாற்றங்களை செய்ய ஐஆர்டிஏ முடிவு செய்துள்ளது. இதுவரை மறைமுகமாக பிடிக்கப்பட்ட சேவை வரி இனி எல்ஐசி பாலிசிகளில் வெளிப்படையாக அறிவிக்கப்பட உள்ளது.

தற்போதைய நிலவரப்படி,..

எல்ஐசியில் 50க்கும் மேற்பட்ட பாலிசிகள் நடைமுறையில் உள்ளன. இவற்றில் பெரும்பாலான பாலிசிகள் ரத்து செய்யப்பட உள்ளன. ஒரு சில பாலிசிகளில் மட்டும் பாலிசிதாரர்களின் வயதுக்கு தகுந்தாற்போல பிரீமிய தொகையில் மாற்றம், அவரவர் விருப்பத்திற்கு ஏற்பவும் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இந்த மாற்றங்கள் மற்ற தனியார் இன்சூரன்ஸ் பாலிசிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள பாலிசிகளில் பிரீமியம் கட்டி வருபவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அந்த பாலிசிகள் அப்படியே தொடர்கின்றன.

அக்டோபர் 1 ஆம் தேதி முதல் மட்டுமே புதிய பாலிசிகள் நடைமுறைக்கு வருகின்றன. இது குறித்து எல்ஐசி வளர்ச்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், எல்ஐசியின் பல திட்டங்கள் மக்களின் பாராட்டை பெற்றவை. வாழும்போதும், வாழ்க்கைக்கு பிறகும் உதவும் ஜீவன் ஆனந்த், கூலி தொழிலாளிக்கு கூட உதவும் ஜீவன் சரள் உள்ளிட்ட பல பாலிசிகளை ஐஆர்டிஏ ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.

புதிய பாலிசிகள் மக்களுக்கு மேலும் பயன்படும் விதத்திலே மாற்றப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எனவே, சேவை வரி விதிப்பு, மாற்றங்கள் பற்றி மக்கள் கவலைப்பட வேண்டாம். இதுவரை எல்ஐசி பாலிசி எடுக்காதவர்கள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் எடுத்தால் பழைய பாலிசிகளின் பயனுள்ள நன்மைகளை பெறலாம் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்