அக்டோபர் முதல் பிற நிறுவனங்களுக்கு பணியாளர்கள் மாறினாலும் நிரந்தர பி.எப். எண் வைத்துக் கொள்ளும் வசதி அறிமுகம்

செவ்வாய், 25 மார்ச் 2014 (06:39 IST)
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு (இ.பி.எப்.ஓ) தனது 5 கோடி சந்தாரர்களுக்கு நிலையான கணக்கு எண் வசதியை அக்டோபர் மாதம் முதல் அறிமுகம் செய்கிறது.
FILE

இதனால் அடிக்கடி பிற நிறுவன பணிகளுக்கு மாறிச் செல்லும் தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள். இந்த திட்டம் அமலுக்கு வந்த பிறகு இவர்கள் பி.எஃப். கணக்கை மாற்றும்படி விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது. தொழிலாளர்கள் பல்வேறு நிறுவனங்களின் வேலைக்கு மாறிச் சென்றாலும் அவர்கள் பணிபுரியும் காலம் வரை யு.ஏ.என். எனப்படும் இந்த நிரந்தர கணக்கு எண்ணை தக்கவைத்துக் கொள்ளலாம்.

அமைப்பு சார்ந்த பணியாளர்களுக்கு இது பெரிய உதவியாக இருக்கும். குறிப்பாக கட்டுமான துறை பணியாளர்கள் அடிக்கடி பணிக்காக நிறுவனங்கள் மாறுவதால் அவர்களுக்கு பி.எஃப். கணக்கு எண்ணை மாற்ற வேண்டிய வேலை பளு குறையும்.

பி.எஃப். சந்தாரார்களுக்கு நிரந்தர கணக்கு எண் வழங்குவதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் நிரந்தர கணக்கு எண் வழங்கப்படும் என மத்திய வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஆணையர் கே.கே. ஜலான் தெரிவித்தார்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இ.பி.எப்.ஓ) நடப்பு நிதி ஆண்டில் பிப்ரவரி மாத இறுதி வரை 1.10 கோடி கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கியுள்ளது. இது மார்ச் இறுதிக்குள் 1.20 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 13 லட்சம் பி.எஃப். கணக்கை மாற்றுவதற்கான கோரிக்கைகளும் அடங்கும்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பி.எஃப். கணக்கை மாற்றுவதற்கான கோரிக்கைகளை ஆன்லைனில் பதிவு செய்வதற்கான வசதியை அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு கணக்குகள் பரிமாற்ற பணிகள் வேகமாக நடைபெற்றன. கடந்த 2012-13 ஆம் நிதியாண்டில் 1.08 கோரிக்கைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 88 சதவீத கோரிக்கைகள் விண்ணப்பித்த 30 நாள்களில் தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்