எண்ணெய் தேவை அடுத்த 10 ஆண்டுகளில் 40% அதிகரிக்கும்: மன்மோகன் சிங்

திங்கள், 1 நவம்பர் 2010 (13:16 IST)
பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்துவரும் நமது நாட்டின் பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் தேவை அடுத்த 10 ஆண்டுகளில் 40 விழுக்காடு அதிகரிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

டெல்லியில் பெட்ரோடெக் 2010 மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், வேகமாக வளர்ந்துவரும் நமது நாட்டின் பொருளாதாரத்தின் எரிபொருள் தேவையை வாங்கக் கூடிய விலையில் அளிக்க வேண்டிய அவசியம் இந்தியாவிற்கு உள்ளது” என்று கூறினார்.

அடுத்த 10 ஆண்டுகளில் நமது எரிபொருள் தேவை 40 விழுக்காடு உயரும் அதே வேளையில் நமது நாட்டின் உள்ளூர் உற்பத்தி 12 விழுக்காடு அளவிற்கு மட்டுமே உயரும் நிலை உள்ளதால் நாம் இறக்குமதியைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார்.

2009-10ஆம் நிதியாண்டில் இதுவரை நாம் 13.8 கோடி டன் எரிபொருள் இறக்குமதி செய்துள்ளோம். நமது நாட்டின் ஒட்டுமொத்த தேவையில் 75 விழுக்காடு நாம் இறக்குமதி செய்கிறோம். எரிவாயு தேவையில் நாம் மூன்றில் ஒரு பங்கு இறக்குமதி செய்கிறோம்.

நமது ஆண்டு சராசரி இறக்குமதி 15.92 கோடி டன்கள், இதற்காக அந்நிய செலாவணியில் நாம் செலுத்துவது 79.5 பில்லியன் டாலர்களாகும் என்றும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்