இந்தியா – அமெரிக்க வர்த்தகம் 31% உயர்வு

புதன், 2 பிப்ரவரி 2011 (17:57 IST)
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இரு தரப்பு வர்த்தகம், 2010ஆம் ஆண்டில், அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 31 விழுக்காடு அதிகரித்து 50 மில்லியனை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இத்தகவலை அமெரிக்க வர்த்தகத் துறை வெளியிட்டுள்ளது. 2010ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 45.01 பில்லியன் அளவிற்கு நடந்துள்ளது. அது டிசம்பர் மாதத்துடன் சேர்க்கையில் 50 பில்லியன் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறியுள்ளது.

2009ஆம் ஆண்டில் இரு தரப்பு வர்த்தகம் 37.61 பில்லியனாக இருந்தது. ஆனால் அதற்கு முந்தைய ஆண்டு (2007இல்) 39 பில்லியனாக இருந்தது. உலக பொருளாதார பின்னடைவின் காரணமாக 2009இல் குறைந்துள்ளது.
2010ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு செய்யப்பட்ட ஏற்றுமதி 27.34 பில்லியன் டாலர்களாகும். இது அதற்கு முந்தைய ஆண்டு ஏற்றுமதியான 19.38 பில்லியனை விட 41.36 விழுக்காடு அதிகமாகும்.

அமெரிக்காவின் இந்திய ஏற்றுமதி 2010ஆம் ஆண்டில் 17.61 பில்லியனாக இருந்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டு ஏற்றுமதியான 15.03 பில்லியனை விட 17.2 விழுக்காடு அதிகமாகும்.

இந்தியாவின் ஏற்றுமதியில் மெருகேற்றப்பட்ட வைரமே முதலிடத்தில் உள்ளது. அதன் ஏற்றுமதி மட்டும் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 21.5 விழுக்காடாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்