பஞ்சபூதங்களான நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் இவைகளால் ஆனதே பிரபஞ்சம். அவற்றுள் நெருப்பை வழிபடுவதுதான் தீபத் திருவிழா. திருவண்ணாமலையில் கார்த்திகை மாதத்தில்தான் மகா தீபம் ஏற்றப்பட்டு பதினேழு நாட்களுக்கு பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. தீபத் திருநாளன்று அதிகாலையில் மலையடிவாரத்தில் பரணி தீபமும், மாலையில் மளையுச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகின்றன.
திருவண்ணாமலை ஜோதிக்கு நிகர் வேறெதுவும் இல்லை. பஞ்சபூத லிங்கத்தில் அக்னி லிங்கமாய் முதன்மையாய் விளங்குவது திருவண்ணாமலை. இம்மலை குன்றின் சிகரத்தில் கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் ஜோதியானது உலகம் முழுவதும் உள்ள அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞான ஒளியைப் பரப்பும் சிவஞான ஜோதியாகப் பிரகாசிக்கும் என்பது ஐதீகம். அருட் பெஞ்ஜோதியாம் ஆண்டவன் அருவமாகவும் உருவமாகவும் விளங்குவது போன்று அக்னியும் பிரகாசிக்கின்றது.