சகலவித செல்வங்களை அள்ளித் தரும் வரலஷ்மி விரதம்...!

சிராவண மாதம் (ஆடி அல்லது ஆவணி) பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையன்று சுமங்கலிகள் அனுஷ்டிக்கும் விரதம் வரலஷ்மி விரதம் ஆகும்.
அன்றைய தினம் சுமங்கலிகள் உபவாசமிருந்து பக்தி சிரத்தையுடன் வீட்டை சுத்தம் செய்து கோலமிட்டு ஒரு மண்டபம் அமைத்து அம்மண்டபத்தில் முதலில் ஒரு அடி சதுரமாக நெல்லைப் பரப்பி அதன் மீது ஒரு தாம்பாளத்தில் அரிசியை பரப்பி அதன் மீது ஒரு வெள்ளி அல்லது செப்பு குடத்தை அல்லது பித்தளை செம்பை வைத்து, அதில் அரிசி அல்லது ஜலத்தால் நிரப்பி மாவிலைக் கொத்து தேங்காய் வைத்து, கலசத்தில் அம்பாள் முகம் வரைந்து முடிந்தால் தேவியின் முகம் வைத்து அலங்காரம் செய்து புஷ்பங்களால் அலங்கரித்து சந்தனம் அட்சதை புஷ்பங்களால் வரலஷ்மி தேவியை அர்ச்சனை செய்ய வேண்டும். வழிபாடு  செய்ய நோன்பு கயிறு சார்த்தி கொழுக்கட்டை, அப்பம், சுய்யம், வடை, பாயசம், இட்லி, சாதம், பருப்பு நெய், தயிர், பழவகைகள் படைத்து வழிபட வேண்டும்.
 
பின்னர் அஷ்டலஷ்மிகளை வழிபாடு செய்து அர்சித்து கற்பூர தீபம் ஏற்றி வணங்கி நோன்பு கயிறு அணிந்து கொள்ள வேண்டும். இந்த நோன்புக் கயிறில் மஞ்சள் தடவி ஒன்பது முடிச்சிட்டு புஷ்பம் கட்டி கலசத்தில் வைத்து பூஜித்து கையில் கட்டிக் கொண்டு மற்ற சுமங்கலிகள் உடன் பூஜை செய்தால் அவர்களுக்கு கட்டி  விட வேண்டும்.
 
கலசத்தில் ஒன்பது வெத்தலை, ஒன்பது பாக்கு, ஒன்பது ஒரு ரூபாய் நாணயங்கள் இட வேண்டும். நெய் பந்தம் ஆரத்தி செய்தல் வேண்டும். இந்த பூஜை முடித்தபின் மறுநாள் கலசத்தை எடுத்து பத்திரமாக வைத்திருந்து அதில் இட்ட அரிசியில் மறு வெள்ளியன்று பொங்கல் செய்து அம்மனுக்கு நிவேதனம் செய்ய  வேண்டும்.
 
கலசம் அலங்கரித்த பின் ஹாலில் தாம்பாளத்தில் வைத்து ஆரத்தி காட்டி வரலஷ்மி தேவியை ஆவாஹனம் செய்து தன் இல்லத்திற்கு வருமாறு அழைத்துப் பாடி பூஜையறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். பூஜையறையில் மண்டபத்தில் வைத்து முதலில் விநாயகர் பூஜை செய்து பின் சங்கல்பம் செய்து கொண்டு  வரலஷ்மி விரத பூஜை செய்ய வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்