புவி வெப்பமடைதல் சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் கூட அச்சுறுத்தலே!

வியாழன், 3 செப்டம்பர் 2009 (17:05 IST)
தொழில் மயமாக்கத்தால் வெளியேறும் வாயுக்களால் உலகம் வெப்பமடைதல் அதிகரித்துவரும் நிலையில், அது முன்னேற்றத்திற்குத் தடையாவது மட்டுமின்றி, சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகும் அபாயம் உள்ளதென சுற்றுச் சூழல் இயக்கத்தைச் சேர்ந்த சுனிதா நாராயணன் எச்சரித்துள்ளார்.

ஐ.நா. மேற்கொண்ட ‘உலகப் பொருளாதாரம், சமூக ஆய்வு 2009அறிக்கையை விளக்கி நியூ டெல்லியில் புதன் கிழமை நடந்த கூட்டத்தில் பேசிய அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் மையத்தின் இயக்குனரான சுனிதா நாராயணன், கரியமிள வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் வளர்ந்துவரும் நாடுகளிடையே காத்திரமான ஒற்றுமை நிலவுகிறது என்றும், இதில் வளர்ந்த நாடுகளின் பங்கே மிக முக்கியமானது என்று கூறினார்.

உலக வெப்பமயமாக்கலைத் தடுத்து நிறுத்த வரும் டிசம்பரில் கோபன்ஹேகன் நகரில் நடைபெறவுள்ள மாநாட்டில் வளரும் நாடுகளான இந்தியா, பிரேசில், சீனா ஆகியன வளர்ந்த நாடுகளுடன் இப்பிரச்சனையில் மிகவும் போராட வேண்டியிருக்கும் என்று கூறிய சுனிதா, புவி வெப்பமயமாதலைத் தடுக்க உலக நாடுகளிடையே ஒரு ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு இதுவே கடைசி வாய்ப்பு என்று கருதப்படுவதாகக் கூறினார்.

உலகை மாசுபடுத்துவதில் வளர்ந்த நாடுகளே பெரும் காரணம் என்றாலும், அதன் சுமையை வளரும் நாடுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவை எதிர்ப்பார்க்கின்றன என்று கூறினார்.

உலகம் வெப்பமாவதை தடுக்கவும், அதற்கான வழிமுறைகளை ஏற்கவும், அதனடிப்படையிலான புதிய தொழில் நுட்பங்களை வளர்ந்த நாடுகள் மற்ற நாடுகளுக்கு தடையேதுமின்றி வழங்கலும், அதற்கான தொழில் நுட்பங்களில் முதலீடுகளைச் செய்தலும் அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சாத்தியமான வழிகளே என்று கூறிய சுனிதா, இன்றைய நிலையில் உலகின் சுற்றுச் சூழலிற்கு மட்டுமே அச்சுறுத்தலாய் உள்ள இப்பிரச்சனை எதிர்காலத்தில் சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் கூட அச்சுறுத்தலாகலாம் என்று எச்சரித்தார்.

காற்றாலை, நீர் மின் நிலையம், சூரிய வெப்ப சக்தியை மின் சக்தியாக்கல் போன்ற மாற்றுத் தொழில் நுட்பங்களில் முதலீடு செய்வதன் மூலம் வெப்பமயமாதலை மிக அதிக அளவிற்கு குறைக்க முடியும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்