நீலம் புயல்: புயல்களுக்கு பேர் வைக்கலாமா? ஏன் வைக்கின்றனர்?

வியாழன், 1 நவம்பர் 2012 (17:51 IST)
FILE
புயல்களுக்கு பெயர் வைப்பு வைபவம் வரலாற்றில் சமீபத்தில் தோன்றியதே! புயல் பற்றிய செய்திகள் எளிதில் மக்களைச் சென்றடையும் 'கம்யூனிகேஷன்' எளிமைக்காகவே பெயர் சூட்டப்படுவதாக கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் இயற்கைச் சீற்றங்களுக்கு புராணிக தீய சக்திகளின் பெயர்கள் சூட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் உண்டு. ஆனால் நாம் 'நாகரிகமடைந்த' சமுதாயம் அல்லவா? எனவே இப்போது போய் அசுரர்களின் பெயர்களை இயற்கைச் சீற்றங்களுக்கு வைக்க முடியுமா? அப்படி வைத்தால்தன இன்றைய அரசியல் தலைவர்கள் சும்மா விடுவார்களா?

அதனால்தான் மாலா, ராஷ்மி, நர்கிஸ், பிஜிலி, லைலா, தானே தற்போது நீலம் (நிலமா நீலமா என்பதில் வேறு குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை).

வட இந்திய கடலில் உருவாகும் புயல்களுக்கு மேற்கூறிய பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. அட்ளாண்டிக் பெருங்கடலில் உருவாகும் ராட்சத புயல்களுக்கு மட்டுமே பெயர் வைக்கும் வழக்கம் இருந்தது. இது படிப்படியாக ஒருவர் செய்தால் மற்றவர் செய்துதான் ஆகவேண்டும் என்ற மனித குலத்தின் தலையாய 'போலி செய்தல்' நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

உலக வானிலை ஆய்வு மையத்தின் விதிமுறைகளுக்கு இணங்கவே இந்த பெயர் வைக்கும் வைபவத்தில் மற்ற நாடுகள் செயல்படுகின்றன. 2000 ஆண்டு இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு பெயர் சூட்டு வைபவத்திற்கு ஒப்புக் கொள்ளப்பட்டு 2004ஆம் ஆண்டு உடன்படிக்கை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இப்பகுதியில் வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியன்மார், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் வரிசையாக புயலுக்கு பெயர் சூட்டியுள்ளன.

நேற்று தமிழகம் தப்பித்த நீலம் புயலை பாகிஸ்தான் வழங்கியது. கடந்த வாரம் ஏற்பட்ட புயல் முர்ஜான் என்று பெயரிடப்பட்டது. இந்தப் பெயரை ஓமன் வழங்கியது.

அடுத்த புயலின் பெயர் மகாசென், இது இலங்கை வழங்கிய பெயர். மற்றும் பைலின் இது தாய்லாந்து வழங்கிய பெயர்.

அடுத்ததாக இந்தியா கொடுத்துள்ள பெயர்கள் வருமாறு: லெஹர், மேக், சாகர், வாயு ஆகியவையாகும்.

ஆனாலும் சமூகத்தை தீவிரமாக ஆராய்ந்து விமர்சனம் செய்வோர்கள் பலர் பெயர் வைப்பதை எதிர்க்கின்றனர். ஒரு நாட்டைப் புரட்டிப் போட்டு ஏகப்பட்ட துன்பங்களையும் அழிவுகளையும், மரணங்களையும் கொடுத்துவிட்டுச் செல்லும் ஒரு பேரழிவிற்கு "பூவழகி" என்று பெயர் வைத்தால் நன்றாகவா இருக்கிறது என்று ஒரு முறை எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் குறிப்பிட்டதும் நினைவு கொள்ளத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்