சென்னையை பசுமையாக்க புதிய திட்டம்: ஒரு குழந்தைக்கு ஓர் மரக்கன்று

செவ்வாய், 4 ஆகஸ்ட் 2009 (19:55 IST)
சென்னை நகரை பசுமையாக்கும் வகையில், மாநகராட்சி எல்லைக்குள் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் வீட்டு முன்பும் ஓர் மரக்கன்று நடப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து மேயர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

சென்னை நகரை பசுமைக்கும் விதமாக சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்கனவே 20 ஆயிரம் மரக்கன்றுகளும், வனத்துறை மூலம் 40 ஆயிரம் மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேலும் ஓர் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி எல்லைப் பகுதிக்குள் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பிறந்த அன்றே குழந்தையின் பெற்றோர் வசிக்கும் வீட்டிலோ அல்லது அப்பகுதியில் இட வசதிக்கேற்ப ஓர் மரக்கன்று நடப்படும். அக்குழந்தைக்காக மரக்கன்று நடப்படுகிறது என்ற வாசகம் அடங்கிய சான்றிதழ் அக்குழந்தையின் பெற்றோருக்கு வழங்கப்படும்.

இதனால் தங்கள் குழந்தையின் பிறப்பிற்காக நடப்பட்ட அம்மரக்கன்றை தங்கள் குழந்தைக்கு நிகராக பொற்றோர்கள் பாதுகாப்பார்கள். இதன் மூலம் சென்னையில் ஒரு ஆண்டிற்கு சுமார் 80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை மரக்கன்றுகள் நடும் வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் பசுமையான சென்னையை உருவாக்கவும் முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்