வேலையின்மையல்ல, தொழில் திறனின்மையே பிரச்சனை: அசோசம்

திங்கள், 27 டிசம்பர் 2010 (14:56 IST)
நமது நாட்டில் தற்போது் நிகழ்ந்துவரும் படுவேகமான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக 2011இல் ஒன்றரை கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ள இந்திய தொழில் கூட்டமைப்புகளின் ஒன்றியம், ஆனால் இந்த பணி வாய்ப்புகளை பெறக்கூடிய தொழில் திறன் பெற்ற இளம் சமூகம் இல்லாமையே பெரும் சவாலாக இருக்கும் என்று கூறியுள்ளது.

“அடுத்த ஆண்டில் உத்தேசமாக 1 முதல் 1.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும் நிலை உள்ளது. இந்த வேலை வாய்ப்புகளில் 75 விழுக்காடு தொழில் திறன் பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்க முடியும். தேவைப்படுகிற தொழில் திறன் அற்றவர்கள் அதிகம் இருந்தால், அதனால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது” என்று இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் ஒன்றியம் (Associated chambers of commerce and industry - Assocham) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

நமது நாட்டில் படித்த பல கோடி இளைஞர்கள் வேலையற்று இருப்பதற்குக் காரணம், அவர்கள் தொழில் பயிற்சி பெறாததே என்று கூறியுள்ள அந்த அறிக்கை, பல இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையற்றவர்களாக இருப்பதற்குக் காரணம் அவர்கள் வேலையை செய்யும் திறன்றறவர்களாக இருப்பதே என்று கூறியுள்ளது.
அடுத்த ஆண்டில் உருவாகும் மொத்த வேலை வாய்ப்பில் 90 விழுக்காடு தகவல் தொழில் நுட்பம், த.தொ.சேவைகள், உயிரி-தொழில்நுட்பம் போன்ற திறன் சார் பணி வாய்ப்புகளாகவே இருக்கும் என்று கூறியுள்ள அசோசம், தகுதி வாய்ந்த த.தொ. நெறிஞர்களுக்கு அடுத்த ஆண்டு மிகப் பெரிய மகசூல் ஆண்டு என்று கூறியுள்ளது.

அவர்களின் ஊதியம் 30 முதல் 40 விழுக்காடு வரை உயரும் என்று அசோசம் பொது செயலர் டி.எஸ்.ரவத் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்