நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

வெள்ளி, 6 நவம்பர் 2009 (15:59 IST)
புதுக்கோட்டையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நவ.8ஆம் தேதி துவங்குகிறது. பயிற்சியின் முடிவில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும்.

இதுகுறித்து தஞ்சாவூர் சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் எம்.ஆறுமுகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், நகை மதிப்பீடு மற்றும் அதன் நுட்பங்கள் குறித்த வகுப்பறைப் பயிற்சியில் அடிப்படை உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கத்தை பற்றிய அடிப்படை விவரம், தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, சுத்தத் தங்கம் மற்றும் நகையை அழித்து தரம் அறியும் முறை, நகைகளின் வகைகள், வங்கியில் நகைக்கடன் வழங்கும் முறை, ஹால்மார்க், அடகு பிடிப்போர் நடைமுறைச் சட்டம் மற்றும் விதிகள் போன்ற பாடங்களில் 40 மணி நேர வகுப்பறை பயிற்சி அளிக்கப்படும்.

நகை செய்யும் முறை குறித்து 30 மணி நேரமும் உரை கல் முறையில் தங்கத்தின் தரம் அறியும் பயிற்சி 30 மணி நேரமும் அளிக்கப்படும். ஆக 100 மணி நேரப் பயிற்சி இது.

பயிற்சியின் முடிவில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்றிதழ் பெற்றவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துகொள்ளலாம். வங்கிகளில் வேலைவாய்ப்பு பெற முடியும்.

நவ. 8-ம் தேதி பயிற்சி தொடங்குகிறது. வாரத்தில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாள்கள் என்ற விகிதத்தில் 8 வாரங்கள் (17 நாள்கள்) பயிற்சி நடைபெறும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தை 99429 66597 என்ற எண்ணுக்குத் தொடர்புகொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்