செ‌ன்னை ப‌ல்கலை : சட்ட மாணவர்கள் கடைசி வாய்ப்பு

செவ்வாய், 5 மே 2009 (11:59 IST)
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் 1996-97-ம் ஆண்டு வரை, பி.எல்., எம்.எல். ஆ‌கிய ச‌ட்ட‌‌ப் படி‌ப்பு படித்து தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத கடைசியாக ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இதற்கு வழக்கமான தேர்வு கட்டணத்துடன் ஒரு பாடத்திற்கு தலா ரூ.15,000 அபராத கட்டணம் செலுத்த வேண்டும். அபராத கட்டணம் மற்றும் தேர்வு கட்டணத்தை பல்கலைக்கழக பதிவாளர் பெயரில் வரவோலை (டிமாண்ட் டிராப்‌ட்) எடுக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்ப படிவங்களை இன்று (05.05.2009) முதல் பெற்றுக்கொள்ளலாம். சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா கட்டிடத்தில் இயங்கி வரும் இ-6, சட்டப் பிரிவில் விண்ணப்பங்கள் கிடைக்கும்.

மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த கல்லூரி மூலமாக வருகிற 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதேபோல், ஒரு ‌சில பாட‌ங்க‌ளி‌ல் தோ‌ல்‌வி அடை‌ந்த பழைய பி.இ., பி.டெக்., பி.ஆர்க். மாணவர்கள் விண்ணப்பிக்கவும் கடைசி நாள் 15-ந் தேதி ஆகும்.

மேற்கண்ட தகவலை, சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) என்.ரெங்கநாதம் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்