கடலோரக் காவல்படையில் அதிகாரி பணிவாய்ப்பு

இந்திய கடலோரக் காவல்படையில் இளைஞர்களுக்கு ஏராளமான பணிவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அசிஸ்டன்ட் கமாண்டன்ட் அதிகாரி பணியிடங்களுக்கு திருமணமாகாத ஆண், பெண் இருபாலரிடமும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. பல பிரிவுகளில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

பிளஸ் 2 தேர்வில் கணிதம், இயற்பியல் பாடங்களைப் படித்திருப்பதுடன், பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். 01/07/1985இல் இருந்து 30/06/1989க்குள் பிறந்திருக்க வேண்டும்.

பொதுப்பணி நேவிகேட்டர் பிரிவில் அசிஸ்டன்ட் கமாண்டன்ட் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் பி.எஸ்சி. படிப்பில் கணிதம், இயற்பியல் பாடங்களைப் படித்திருக்க வேண்டும். இவர்கள் 01/07/1983இல் இருந்து 30/06/1991க்குள் பிறந்திருக்க வேண்டும்.

டெக்னிக்கல் பிரிவு அசிஸ்டன்ட் கமாண்டன்ட் பணிக்கு நேவல் ஆர்க்கிடெக்சர், மரைன், எலக்ட்ரிக்கல், புரொடக்சன், ஏரோநாட்டிக்கல், மெஷின் கண்ட்ரோல் ஆகிய பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கூறிய பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற உடல் எடையும் பெற்றிருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரிவடையும் தன்மை உடையதாகவும், சிறந்த கண்பார்வைத் திறனும் இருக்க வேண்டும்.

இதுதொடர்பான முழு விவரங்களை indiancoastguard.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The Director (MRP&T), Post Box No: 127, Noida (U.P)- 201301.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசித் தேதி ஜூலை 19. இப்பணிக்கான தேர்வுகள் சென்னை, மும்பை, கொல்கட்டா, விசாகப்பட்டினம், புவனேஷ்வர், கொச்சி, நாக்பூர் ஆகிய இடங்களில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்