அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் புதிய ஊழியர்களை நியமிக்க அரசு அனுமதி

புதன், 24 டிசம்பர் 2008 (12:38 IST)
அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் இளநிலை உதவியாளர், கணினி இயக்குநர், அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களை நேரடியாகவே நியமனம் செய்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு‌த் துறை வெளியிட்டுள்ள அரசு உத்தரவில், "அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக 14 நல வாரியங்கள் உள்ளன. தொழிலாளர்களை பதிவு செய்தல், சரிபார்த்தல் மற்றும் நல உதவிகள் தொடர்பான பணிகளை இந்த வாரியங்கள் செய்கின்றன. பணிகளை மாவட்ட தொழிலாளர் அலுவலர் மூலம் செயல்படுத்த மாவட்டவாரியாக புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், சேலம், கோயம்புத்தூர், விழுப்புரம், திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, திருவண்ணாமலை மற்றும் தருமபுரி ஆகிய 12 மாவட்டங்களில் அமைப்புசாரா தொழிலாளர் பதிவு எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் ஓவ்வொரு மாவட்டத்துக்கும் 11 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

புதிதாக தொடங்கப்பட்ட அரியலூர் மாவட்டத்துக்கு 12 பணியிடங்களும், மற்ற மாவட்டங்களில் தலா 6 பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் அலுவலர், கண்காணிப்பாளர், உதவியாளர் போன்ற பதவிகளுக்கு மற்ற துறைகளில் இருந்து டெபுடேஷன் அடிப்படையிலோ அல்லது வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவோ நியமனம் செய்து கொள்ளலாம்.

இளநிலை உதவியாளர், கணினி இயக்குநர், அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களை நேரடியாகவே நியமனம் செய்து கொள்ளலாம். அதிகமாக உறுப்பினர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள 12 மாவட்டங்களில் கூடுதலான அலுவலகங்கள் தொடங்கவும் அரசு அனுமதித்துள்ளது.

அனைத்து அலுவலர்களும் தொழிலாளர் நல ஆணையரின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் செயல்படுவார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்