புற்றுநோய் மருத்துவராக விரும்பும் புற்றுநோய் தாக்கப்பட்ட மாணவி
செவ்வாய், 26 மே 2009 (12:43 IST)
சிறு வயதில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாணவி பத்தாம் வகுப்பு தேர்வில் 500-க்கு 472 மார்க் எடுத்து சாதனை படைத்துள்ளார். படித்து பட்டம் பெற்று புற்றுநோய் மருத்துவர் ஆக வேண்டும் என்பதே அவரது லட்சியமாம்.
சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் முகைதீன் - சுல்பியா தம்பதிகளின் மகள் பாத்திமா. சிறு வயதில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர்களின் பாத்திமா இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 500-க்கு 472 மார்க் எடுத்து பள்ளியில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
மண்ணடி செயின்ட் ஆனிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவியான பாத்திமாவின் மதிப்பெண் விவரங்கள் : தமிழ் - 91, ஆங்கிலம் - 89, கணிதம் - 97, அறிவியல் - 98, சமூக அறிவியல் - 97.
பாத்திமாவுக்கு 6-வது வயது இருக்கும்போது ரத்த புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பாத்திமாவின் பெற்றோர் உடனடியாக சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பாத்திமாவுக்கு சிகிச்சை பார்த்தனர். 4 ஆண்டு கால தீவிர சிகிச்சைக்குப் பிறகு பாத்திமா ரத்த புற்றுநோயிலிருந்து பூரணமாக குணம் பெற்றார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, எனக்கு 6 வயது இருக்கும்போது ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக பெற்றோர் சொல்வார்கள். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டதால் முழுமையாக குணப்படுத்திவிட்டனர். பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் கடுமையாக படித்தேன். அதிக மதிப்பெண் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன்.
ஆனால், என்னால் பள்ளியில்தான் முதலிடத்தைப் பிடிக்க முடிந்துள்ளது. 11-ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் சேரப்போகிறேன். சிறுவயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். எனவே, எதிர்காலத்தில் பெரிய புற்றுநோய் மருத்துவர் ஆகி ஏழைகளுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் என்று கூறுகிறார்.