2 ஆண்டுகளில் 2.40 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு பயிற்சி

வெள்ளி, 21 ஆகஸ்ட் 2009 (13:45 IST)
மத்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 2.40 லட்சம் பேருக்கு பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், ஐந்தாண்டுகளில் 10 லட்சம் நபர்களுக்கு பயிற்சி அளிக்கவும் அதன் பிறகு ஆண்டுதோறும் 10 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கவும் ரூ.550 கோடி மதிப்பீட்டில் 'திறன் மேம்பாட்டு திட்டம்' என்ற திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அரசு நிர்வாக நடைமுறைகளால் தாமதம் ஏற்படாமல் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான துறைகளும் இத்திட்டத்தின் வரம்பிற்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அமைச்சரவைக் குழு கேட்டுக் கொண்டது.

நன்கு நிரூபணமான மதிப்பீடு செய்யும் நிறுவனங்களைக் கொண்டும் ஒவ்வொரு துறையிலும் உயர்தர நிபுணத்துவத்தைக் கொண்டும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சரவைக் குழு தெரிவித்திருந்தது. இத்திட்டத்தின் கீழ் மதிப்பீடு செய்யும் நிறுவனங்களாக அடையாளம் காணப்படும் நிறுவனங்கள் குறித்து தனக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சரவை குழு கூறியிருந்தது.

இது தொடர்பான நடவடிக்கை அறிக்கை அமைச்சரவை குழுவின் முன்பாக சமர்ப்பிக்கப்பட்டது. அதில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 450 வேலை வாய்ப்பு திறன் படிப்புகள் வடிவமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 450 படிப்புகளில் 28 படிப்புகள் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பம் தொடர்புடையவை. இத்திட்டம் நன்கு செயல்பட தொடங்கியிருப்பதாகவும் நாடு முழுவதும் 4,093 உயர்தர தொழில் கல்வி நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் இதுவரை 2,40,650 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சரவை குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்