வேலைவா‌ய்‌ப்பு அலுவல‌க‌த்‌தி‌ல் ப‌திவு செ‌ய்ய சா‌ன்‌றித‌ழ்களுட‌ன் வரவே‌ண்டு‌ம்

சனி, 20 டிசம்பர் 2008 (13:10 IST)
முதுகலை மற்றும் தொழிற்படிப்பு முடித்த மாணவ‌ர்க‌ள் வேலைவா‌ய்‌ப்பு அலுவலக‌த்‌தி‌ல் பதிவு செய்ய வரும் போது தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை அவசியம் கொண்டுவர வேண்டும் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொதுவாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பள்ளிப்படிப்பு முதல் இளங்கலை படிப்பு வரை படித்து முடித்தவர்கள் பதிவு செய்யலாம். முதுகலை மற்றும் தொழிற்கல்வி படிப்பு முடித்தவர்கள் சென்னையில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தான் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்தது.

இந்த நிலையில், கடந்த ஜுலை மாதம் முதல் முதுகலை மற்றும் தொழிற்கல்வி படிப்பு முடித்த மாணவர்களும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களிலேயே பதிவு செய்துகொள்ளலாம் என அரசு அறிவித்தது.

ஆனால் பதிவு செய்ய வரும் மாணவர்கள் குறிப்பிட்ட சான்றிதழ்களை கொண்டுவர தவறி விடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுகிறது. எனவே முதுகலை மற்றும் தொழில்கல்வி படிப்பு முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் புதிதாக பதிவு செய்ய வரும் மாணவ, மாணவிகள் கல்விச்சான்று (புரொவிஷனல் அல்லது பட்ட சான்றிதழ்), மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், குடு‌ம்ப அ‌ட்டை ஆகியவற்றின் அசல் சான்றிதழ் மற்றும் 2 செட் நகல்களும், ரூ.5 தபால் தலை ஒட்டிய சுயவிலாசம் எழுதிய தபால் உறையும் கொண்டு வரவேண்டும்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பகல் 1 மணி வரை பதிவு நடைபெறும். பதிவு செய்ததற்கான அடையாள அட்டை சென்னையில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலத்தில் இருந்து நேரடியாக அவர்களின் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும்.

ஏற்கனவே சென்னையில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் உள்ளூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வர தேவையில்லை. புதிதாக பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்படும். அவர்கள் கூடுதல் பதிவு
செய்ய விரும்பினால் சென்னை அலுவலகத்திலேயே தபால் மூலமாக பதிவு செய்யலாம் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்