மனிதநேய அறக்கட்டளையின் இலவச IAS, IPS பயிற்சி மையம் அண்ணாநகரில் துவக்கம்

செவ்வாய், 8 செப்டம்பர் 2009 (15:49 IST)
சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை சார்பில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கும் மையம் சென்னை அண்ணாநகரில் துவக்கப்பட்டுள்ளது. இந்த மையம் மூலம் 600 மாணவர்கள் பயன்பெறுவர்.

நேற்று நடைபெற்ற துவக்க விழாவுக்கு மனிதநேயம் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். இலவச பயிற்சி மையத்தின் தலைவர் சைதை துரைசாமி தலைமை தாங்கினார். மனிதநேயம் அறக்கட்டளையின் இயக்குனர் மல்லிகா துரைசாமி குத்துவிளக்கு ஏற்றி மையத்தை தொடங்கி வைத்தார்.

விழாவில் சைதை துரைசாமி பேசுகையில், கல்வியால் மட்டுமே சமூகத்தில் சமநிலையை ஏற்படுத்த முடியும். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து, ஏழை மக்களுக்காக பாடுபட வேண்டும்.

மற்ற கல்வியை விட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி பெறுவது சிறந்தது. ஏன் என்றால் இவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று அதிகாரிகளாக வந்தால் அவர்கள் பொதுமக்களுக்கு சிறந்த பணியை செய்யமுடியும். ஏழைகளுக்கு சேவை செய்ய முடியும் என்று சைதை துரைசாமி பேசினார்.

இதன் பின்னர் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி பேசுகையில், இளைஞர்களுக்கு இலவச கல்வி அளிப்பது நாட்டுப்பற்றுக்கு இணையானது. சைதை துரைசாமி அரசியலை முழுமையாக துறந்து தவமுனிபோல் இந்த பயிற்சி மையத்தை தொடர்ந்து நடத்தவேண்டும் என்றும், சைதை துரைசாமியின் இந்த பணி மகத்தானது என்றும் அவர் பாராட்டினார்.

கடந்த 20 ஆண்டுகளாக சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெறும் தமிழக இளைஞர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துள்ளது. இதற்கு போதிய வசதியின்மையும் முக்கிய காரணம். இந்த பயிற்சி மையம் மூலம் அனைத்து தரப்பினரும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கான சம வாய்ப்பைப் பெற முடியும் என்றார்.

முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.பூர்ணலிங்கம் பேசுகையில், கடின உழைப்பு, உறுதி ஆகியவை போட்டித் தேர்வில் வெற்றி பெறத் தாரக மந்திரங்களாகும். சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் தினமும் 14 மணி நேரம் படிக்க வேண்டும். மேலும், செய்திகளைப் படிப்பதுடன் அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி அறிவைப் பெருக்க வேண்டும் என்றார்.

முன்னாள் டி.ஜி.பி. அலெக்சாண்டர், முன்னாள் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் அபுல் ஹசன் ஆகியோரும் சைதை துரைசாமியின் கல்விப்பணியை பாராட்டி பேசினர்.

விழாவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி மாணவர்கள் பயன்பெறுவதற்கான இதழை வா.செ.குழந்தைசாமி வெளியிட்டார். அதை மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். இலவச பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ள முன்னாள் மாணவர் ஆர்.கோபால்சாமி பெற்றுக்கொண்டார்.

சைதை துரைசாமியின் மனிதநேயம் அறக்கட்டளை சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். இலவச பயிற்சி மையம் சென்னை சி.ஐ.டி. நகரில் தொடங்கப்பட்டது. முதல் ஆண்டிலேயே இந்த மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களில் 12 பேர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றனர். கடந்த ஆண்டு 25 பேர் வெற்றி பெற்றனர். இதைத்தொடர்ந்து சென்னை அண்ணாநகரிலும் பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்