ஜூன் 11 முதல் எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளுக்கான விண்ணப்பம் வினியோகம்

வியாழன், 4 ஜூன் 2009 (12:39 IST)
எம்.சி.ஏ. மற்றும் எம்.பி.ஏ. ஆகிய முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவங்களை வினியோகிக்கும் பணி வரும் 11ஆம் தேதி துவங்குகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல், கலைக் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள எம்.சி.ஏ. மற்றும் எம்.பி.ஏ. படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரும் 30ஆம் தேதி வரை வினியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் என மொத்தம் 37 மையங்களில் இதற்கான விண்ணப்பங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வினியோகிக்கப்பட உள்ளது.

சென்னையில், கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்குனர் அலுவலகம், மாநிலக் கல்லூரி ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.

இதேபோல் மதுரையில் தியாகராயா பொறியியல் கல்லூரி, ஸ்ரீமீனாட்சி அரசு பெண்கள் கல்லூரியிலும், கோவையில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி (சி.ஐ.டி), அரசு கலைக் கல்லூரி ஆகிய இடங்களிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்