மோடி ஹெலிகாப்டர் புறப்படுவதற்கு அனுமதி தர 3 மணி நேரம் தாமதம் - தேர்தல் கமிஷன் விசாரிக்க கோரிக்கை

புதன், 2 ஏப்ரல் 2014 (10:39 IST)
டெல்லி விமான நிலையத்தில் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டர் புறப்படுவதற்கு அனுமதி தர 3 மணி நேரம் தாமதம் ஆனது. இது மத்திய அரசின் சதி என்றும், இதுகுறித்து தேர்தல் கமிஷன் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Modi Helicopter
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று உத்தரபிரதேசம் மற்றும் மத்தியபிரதேசம் மாநிலங்களில் 5 பொதுக் கூட்டங்களில் பேச திட்டமிட்டிருந்தார். இதற்காக நேற்று காலை டெல்லி விமான நிலையத்திற்கு சென்று ஹெலிகாப்டரில் ஏறினார்.
 
ஆனால் அவர் ஹெலிகாப்டர் புறப்படுவதற்கு விமான நிலைய அதிகாரிகள் உரிய நேரத்தில் அனுமதி தரவில்லை. இதனால் அவர் 3 மணி நேரம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதுவரை அவர் ஹெலிகாப்டரிலேயே உட்கார்ந்து இருந்தார்.
 
பின்னர் அவர் மத்திய பிரதேச மாநிலம் பரேலி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, ‘‘நீங்கள் கொளுத்தும் வெயிலில் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் இங்கு வருவதற்கு தாமதமானதற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் இந்த தாமதத்திற்கு காரணம் நான் அல்ல, டெல்லி விமான நிலையத்தில் நான் காலை 9.30 மணியில் இருந்தே ஹெலிகாப்டரில் உட்கார்ந்து இருக்கிறேன். ஆனால் பறக்க அனுமதி உரிய நேரத்தில் தரவில்லை’ என்றார்.
 
என்னால் யாரும் கஷ்டப்படக்கூடாது என்று நினைப்பவன் நான். ஆனால் நீங்கள் இந்த வெயிலில் உட்கார்ந்திருப்பதை பார்த்து வேதனைப்படுகிறேன். உங்களது இந்த முயற்சி வீணாகாது என்ற உறுதியை உங்களுக்கு அளிக்கிறேன் என்றும் மோடி கூறினார்.
 
பின்னர் உத்தர பிரதேச மாநிலம் ரேவா பொதுக்கூட்டத்தில் மோடி இதுபற்றி பேசும்போது, ‘‘தேர்தல் கமிஷன் தான் இந்த தேர்தலில் நடுவர். எனவே நீங்கள் தான் எனது ஹெலிகாப்டரை 3 மணி நேரம் தாமதப்படுத்த யாருடைய சதி காரணம் என்று கண்டுபிடிக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறை வேண்டும். என்னுடைய ஹெலிகாப்டர் பறந்தாலும் சரி, பறக்காவிட்டாலும் சரி, மத்தியில் உள்ள அரசு நிச்சயம் பின்னுக்கு தள்ளப்படும்’ என்றார்.
 
பாரதீய ஜனதா கட்சியும் இதுபற்றி தேர்தல் கமிஷன் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது. கட்சியின் பொருளாளர் பியுஷ் கோயல் கூறும்போது, ‘‘மோடியின் பயணத்தை சீர்குலைக்க திட்டமிட்டே இதுபோன்ற செயலில் மத்திய அரசு ஈடுபட்டிருந்தால் அது மிகவும் கீழ்த்தரமானது. இதுகுறித்து தேர்தல் கமிஷன் விசாரணை நடத்துவதுடன், விமான போக்குவரத்து ஆணையத்துக்கு இதுபோல எந்த அரசியல் தலைவர்களுக்கும் நடக்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்’ என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்