ராகுலின் கருத்து அபந்தமானது: சிரோன்மணி அகாலிதளம்

புதன், 29 ஜனவரி 2014 (18:15 IST)
FILE
1984ஆம் ஆண்டில் சீக்கியர் மீது நடந்த கலவரம் குறித்த ராகுல் காந்தியின் கருத்து அபந்தமானது. பாசாங்குத்தனமானது என்று சிரோன்மணி அகாலிதளம் குற்றம்சாட்டியுள்ளது.

இது பற்றி அக்கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான நரேஷ் குஜ்ரால் கூறியதாவது:-

“2002ஆம் ஆண்டில் குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான கலவரத்திற்கு முதல்வர் நரேந்திர மோடி தான் காரணம் என்றால், 1984ஆம் ஆண்டில் டெல்லியில் நடந்த கலவரத்திற்கு அப்போது பிரதமராக இருந்த ராகுலின் தந்தை ராஜிவ் காந்தி காரணமில்லையா? மேலும் கலவரத்தை அடக்க மூன்று நாட்கள் வரை ராணுவம் வரவில்லை. அதற்கு காரணம் ராணுவம் வரக்கூடாது என்று ராஜிவ் காந்தி உத்தரவிட்டிருந்தார். இப்போது கலவரத்திற்கு காங்கிரஸ் ஆட்சி காரணம் இல்லை என்று கூறுவது அபந்தமானது, பாசாங்குத்தனமானது” என்றார்.

நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு ராகுல் காந்தி அளித்த பேட்டியில், 1984இல் நடந்த சீக்கியர் மீதான வன்முறையையும், 2002ஆம் ஆண்டில் நடந்த குஜராத் வன்முறையையும் சம்மந்தப்படுத்தக்கூடாது என்றும், சீக்கியர் மீதான வன்முறையை அடக்குவதற்கு காங்கிரஸ் ஆட்சி எல்லா நடவடிக்கைகளையும் எடுத்ததாகவும், ஆனால் குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடி அரசு கைவிரித்து விட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்