நாடாளுமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டி

சனி, 22 பிப்ரவரி 2014 (18:02 IST)
டெல்லி மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து நாடாளுமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
FILE

ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அடுத்து, கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியைத் துவக்கினார். கட்சி துவங்கிய சில மாதங்களிலேயே நாடு முழுவதும் ஆம் ஆத்மி கட்சி பரவியது. கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது. பலருடைய எதிர்பார்ப்பையும் மீறி சட்டமன்றத்தில் 28 இடங்களைப் பிடித்து, காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆட்சியமைத்தது.

49 நாட்கள் ஆட்சி நடத்திய அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் பதவிக்கான நடைமுறைகளை மீறி மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராட்டங்களில் ஈடுபட்டார். மின் கட்டண குறைப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தினார். எரிவாயு விலை நிர்ணய முறைகேட்டில் முகேஷ் அம்பானி மீது எஃப்.ஐ.ஆர் போட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். இந்நிலையில் ஜன் லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகள் ஒத்துழைப்பு தர மறுத்ததால் நேற்று ராஜினாமா செய்தார்.

குறுகிய காலத்திலேயே கட்சியை வளர்த்தது, ஊழலுக்கு எதிரான போராட்டங்கள், மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடியது ஆகியவற்றால் ஆம் ஆத்மி கட்சியின் செல்வாக்கு பெருமளவில் வளர்ந்துள்ளதாகவும், தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கட்சிகளை அடுத்து மூன்றாவது இடத்தில் ஆம் ஆத்மி கட்சி பிடித்துள்ளதாகவும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

வரும் மக்களவை தேர்தலில் இந்தக் கட்சி 8 சதவீத வாக்குகளையும் 30 முதல் 40 வரையிலான இடங்களையும் பெறும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இதனை மேலும் அதிகரிப்பதற்கு முயற்சித்து வருகின்றனர்.

வரும் மக்களவை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட முக்கிய ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் போட்டியிடவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மேதா பட்கர் போன்ற சமூக சேவகர்களையும் கட்சி சார்பில் நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்