நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களின் செலவீனம் ரூ.70 லட்சம்?

சனி, 22 பிப்ரவரி 2014 (18:23 IST)
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சம் செலவிடும் தொகையாக ரூ.70 லட்சம் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.
FILE

நாடாளுமன்ற தேர்தலில், பெரிய மாநிலங்களில் வேட்பாளர்கள் செலவு வரம்பு கடந்த 2009ஆம் ஆண்டு ரூ.25 லட்சமாக இருந்தது. 2011ஆம் ஆண்டு இது ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டது. இருப்பினும் இந்த மூன்று ஆண்டுகளில் கடுமையாக விலைவாசி உயர்ந்து, பெரும் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது.

அதனால் வேட்பாளர்கள் தேர்தல் செலவு வரம்பை உயர்த்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. ஏற்கனவே தேர்தலுக்கு உரிய வரம்பினை விட பல மடங்கு தொகையை வேட்பாளர்கள் செலவு செய்து, கணக்கில் குறைத்துக் காட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சிகள் தலைவர்கள் தேர்தல் செலவு வரம்பினை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினர். தற்போதைய செலவு வரம்பு மிகவும் குறைவாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் செலவு வரம்பினை உயர்த்துவது குறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. அந்த வகையில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் வேட்பாளர்கள் செலவு வரம்பில் தற்போதைய அளவை விட ரூ.30 லட்சம் வரை உயர்த்தலாமா என பரிசீலிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை, பெரிய மாநிலங்களில் வேட்பாளர் தேர்தல் செலவு வரம்பினை ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.70 லட்சமாக உயர்த்த பரிசீலிக்கப்படுகிறது. சட்டசபை தேர்தலை பொறுத்தவரை பெரிய மாநிலங்களில் வேட்பாளர்கள் செலவு வரம்பை தற்போதைய அளவான ரூ.16 லட்சத்தை ரூ.28 லட்சம் என்ற அளவுக்கு உயர்த்த பரிசீலனை நடக்கிறது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்னும் ஒரு வாரத்தில் முடிவெடுக்கும் என தகவல்கள் கூறுகின்றன. அதன் பின்னர் மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதும். எனவே வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் செலவு வரம்பு உயர்த்தப்படுவது உறுதியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்