புதுமையான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் அறிமுகம்
புதன், 18 டிசம்பர் 2013 (12:33 IST)
விடைத்தாள்களை எளிதில் மதிப்பீடு செய்வதற்கு வசதியாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 விடைத்தாள் புதுமையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் பெயர், பதிவு எண் ஆகியவற்றை அதில் எழுதத்தேவை இல்லை.
FILE
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 விடைத்தாள்கள் மதிப்பீடு செய்ய கால விரயம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க அரசு தேர்வுத்துறை புதிய நடைமுறையை அமல்படுத்தி உள்ளது.
இதுவரை விடைத்தாள் மெயின் தாளில் மாணவர்கள் அவர்களின் தேர்வு பதிவு எண்ணை குறிப்பிடவேண்டும். அவ்வாறு குறிப்பிட்டால் அந்த எண்ணுக்கு பதிலாக விடைத்தாள் திருத்தும்போது டம்மி நம்பர் கொடுக்கப்படும்.
இப்போது அப்படி அல்லாமல் விடைத்தாளின் முகப்பில் ஒரு தாள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மாணவரின் பெயர், பதிவு எண் ஆகியவை இடம் பெற்றுள்ளது. இதில் மாணவர் தனது கையொப்பத்தை மட்டும் இடவேண்டும். பின்னர் தேர்வு நடத்தும் அதிகாரியின் கையொப்பம் இடம் பெறும். பெயர் எழுதத்தேவை இல்லை. பதிவு எண்ணை எழுதத்தேவை இல்லை.
இந்த முதல் பக்க சீட்டில் அந்த மாணவருக்கு உடைய விடைத்தாள் என்பதை உறுதி செய்ய ஒரே ரகசிய கோடு 4 இடங்களில் உள்ளது. இதில் 2 பகுதியை கிழித்து விட்டு பின்னர் மதிப்பீடு செய்யப்படும். மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் ரகசிய கோடை கண்டுபிடித்து மதிப்பெண் சேர்க்கப்படும்.
இந்த புதிய முறையில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும்போது எளிதாக இருக்கும். ஆசிரியர்கள் மதிப்பெண் போடுவதற்கும், மதிப்பெண்களை கூட்டுவதற்கும் எளிதாக இருக்கும்.
இந்த புதிய முறையில்தான் கடந்த அக்டோபர் மாத தேர்வு நடத்தப்பட்டது. அதன்காரணமாக தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்பட்டதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த புதிய முறை வருகிற மார்ச் மாதத்திலும் அமல்படுத்தப்பட உள்ளது.