தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

புதன், 8 மார்ச் 2017 (01:02 IST)
தமிழகத்தில் தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் மாணவர்கள் தேர்வுக்கு படிப்பதில் தங்களது முழு கவனத்தையும் செலுத்தி வருவார்கள். இந்நிலையில்  மாணவர்கள் படிக்கும் போது அவற்றை நினைவில் பதிவு செய்து வைத்துக் கொள்ள சில வழிமுறைகள் உள்ளது. அந்த வழிமுறைகளை பின்பற்றினால் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அந்த வழிமுறைகள் குறித்து தற்போது பார்ப்போம்




1. கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களில் சூத்திரங்கள், வாய்ப்பாட்டுகள், கணிதம் மற்றும் அறிவியல் சமன்பாடுகள் இருக்கும். இவற்றை மனதில் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பெரியதாக இருக்கும் சமன்பாடுகள், சூத்திரங்களை சிறிய சிறிய பகுதிகளாக பிரித்து நன்றாக படித்து மனதில் பதிவு செய்துகொள்ளவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எவ்வளவு பெரிய சூத்திரத்தையும் எளிதில் படித்து மனதில் பதிவு செய்துகொள்ளமுடியும்.

2. தினமும் இரவு உறங்கச்செல்லும் முன்பு ஒரு மணி நேரத்தை படித்ததை நினைவுபடுத்திப் பார்க்க ஒதுக்குங்கள். நீங்கள் படித்த முக்கியமான சூத்திரங்கள், அல்லது நீங்கள் கடினம் என்று கருதும் பாடங்களை நினைவுபடுத்திப் பாருங்கள். சந்தேகம் ஏற்பட்டால் உடனே புத்தகத்தை எடுத்து மீண்டும் படியுங்கள். பின்னர் உறங்கச்செல்லுங்கள். பின்னர் காலையில் எழுந்ததும் இரவில் படித்ததை மீண்டும் ஒரு முறை நினைவு படுத்திப்பாருங்கள்.

3. எந்த ஒரு பாடத்தையும் படித்து முடித்த பின்னர் ஒரு மணி நேரம் கழித்து புத்தகத்தை பார்க்காமலேயே அந்த பாடங்களை எழுதிப்பாருங்கள். இதன் மூலம் படித்த பாடங்களை மறக்காமல் நினைவில் வைத்திருக்க முடியும்.

4. பழைய கேள்வித்தாள்களை சேகரித்து, அவற்றை வைத்து தேர்வு எழுதிப்பழகுங்கள். ஒவ்வொரு வாரமும் நீங்களாகவே பழைய கேள்வித்தாள்கள் அல்லது நீங்களாகவே தேர்வு செய்த கேள்வித்தாள்கள் மூலம் தேர்வு எழுதிப்பழகுங்கள். இதன் மூலம் தேர்வு குறித்த பயம் விலகும். மேலும் மாதிரித்தேர்வுகள் எழுதிப்பார்க்கும் போது எந்த இடத்தில் எந்தப்பகுதி மறந்து போகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டு அதிக மதிப்பெண் பெற இயலும்.

5. தேர்வு எழுதச்செல்லும் முன்பு சிலர் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக படிப்பார்கள். அது தவறு. தேர்வு எழுதச் செல்லும் முன்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு எதையும் படிக்காமல் அமைதியாக இருக்க வேண்டும். மனதை ஒரு நிலைப்படுத்தி இயல்பு நிலையை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக படித்ததை நினைவு படுத்தி பார்க்கிறேன் என்று படித்த பாடங்களை மனதுக்குள் சொல்லிப் பார்ப்பது கூடாது. ஏன் என்றால் எதாவது ஒரு பகுதி மறந்து விட்டால் உங்களை அறியாமல் பதட்டம் ஏற்படும். இதனால் படித்த அனைத்து பாடங்களும் மறந்து விடும் ஆபத்து உண்டு. எனவே தேர்வுக்கூடம் செல்லும் முன்பு அமைதியான மனநிலையில் சென்று தேர்வை எதிர்கொள்ளுங்கள்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்