TNPSC ஆள்தேர்வு பட்டியல் வெளியிட உயர்நீதிமன்றம் தடை

வெள்ளி, 12 ஜூன் 2009 (16:16 IST)
தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் 3 வாரம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், அய்யன்பேட்டையை சேர்ந்தவர் மோகனசெல்வி. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2006-07ஆம் ஆண்டு குரூப்-4 தேர்வுக்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளம்பரப்படுத்தியது. அதில் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தாளர் (கிரேடு-3) பதவிக்கு விண்ணப்பித்தேன்.

கடந்தாண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி இதற்காக தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவு பட்டியலில் நான் வெற்றி பெற்றதாக இருந்தது.

தேர்வில் வெற்றி பெற்றவர்களை சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைத்தனர். நானும் சான்றிதழ்களை நேரில் காட்டினேன். என்னுடைய சான்றிதழ்களை சரிபார்த்தனர். சான்றிதழ் சரிபார்க்கும் பணி முடிந்தபிறகு, கடந்த 2ஆம் தேதி பணிக்கு தேர்வு பெற்றவர்கள் பட்டியலை தேர்வாணையம் வெளியிட்டது. அந்த பட்டியலில் எனது பெயர் இல்லை.

ஆனால் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 பேரின் பதிவு எண்கள் அதில் இடம்பெற்றுள்ளன. தேர்வு பட்டியல் தயாரித்ததில் முறைகேடு நடந்துள்ளது. ஆகவே, கடந்த 2ஆம் தேதி வெளியிடப்பட்ட தேர்வு பட்டியலுக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும்.

இந்த தேர்வு பட்டியலை ரத்து செய்ய உத்தரவிடுவதுடன், எனது பெயரைத் தேர்வுப் பட்டியலில் சேர்க்கும்படி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். மனுதாரர் சார்பில் எஸ்.பிரபாகரன் ஆஜராகி வாதாடினார்.

மனுவை விசாரித்த நீதிபதி கே.என்.பாஷா, கடந்த 2ஆம் தேதி வெளியிடப்பட்ட தட்டச்சர், சுருக்கெழுத்தர் பதவிக்கான தேர்வுப் பட்டியலை TNPSC அமல்படுத்துவதற்கு 3 வார காலம் இடைக்கால தடைவிதிப்பதாக அறிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்