677 பிடிஎஸ் சுயநிதி காலியிடங்களுக்கு இன்று கலந்தாய்வு

வியாழன், 27 ஆகஸ்ட் 2009 (15:06 IST)
சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 677 அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் காலியிடங்களை நிரப்ப சென்னையில் இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது.

பிடிஎஸ் (பல் மருத்துவம்) படிப்பில் ஏற்பட்டுள்ள காலியிடங்களில் மாணவர்களைச் சேர்க்க சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் நேற்று 2ஆம் கட்ட கலந்தாய்வு துவங்கியது.

சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட 16 பிடிஎஸ் காலியிடங்களில் நேற்று மாணவர்கள் சேர்க்கப்பட்டு, அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள 15 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளின் 744 அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்களில் (ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.82,000) மாணவர்களைச் சேர்க்க நேற்று கலந்தாய்வு நடைபெற்றது. பல்வேறு கல்லூரிகளில் மொத்தம் 67 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

இதையடுத்து மீதமுள்ள 677 அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் காலியிடங்களில் மாணவர்களைச் சேர்க்க இன்று தொடர்ந்து கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது என மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்