6 இடங்களில் அரசு பொறியியல் கல்லூரி தொடக்கம்!

அரியலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 6 இடங்களில் சென்னை அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரிகளுக்கு, முதலமைச்சர் கருணாநிதி சென்னையில் அடிக்கல் நாட்டினார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலூர், திருக்குவளை, ராமநாதபுரம் ஆகிய 6 இடங்களில் அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கும் விழா நடைபெற்றது.

புதிய கல்லூரிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் கருணாநிதி, புதிய கட்டிடங்களுக்கான அடிக்கல்லை நாட்டி, கல்வியாளர்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் விருதுகளையும் வழங்கினார்.

இதேபோல் சென்னை சைதாப்பேட்டையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்திற்கு ரூ.12.5 கோடி மதிப்பில் புதிய வளாகத்திற்கான அடிக்கல்லையும் கருணாநிதி நாட்டினார்.

மேலும் காமராஜர் சாலையில் ரூ.80 லட்சம் செலவில் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற நூல்களையும் முதலமைச்சர் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் காரைக்குடி அழகப்பா செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி, பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றுக்கு, சிறந்த கல்லூரிகளுக்கான விருதும், தலா ரூ.1 லட்சம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்