10‌ஆ‌ம் வகு‌ப்பு மெட்ரிகுலேச‌ன் மாணவர்களுக்கும் பரிசு: அமைச்சர் தங்கம் தென்னரசு

திங்கள், 8 ஜூன் 2009 (16:03 IST)
மெட்ரிகுலேசன் தேர்வில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு முதல் 3 பரிசுகளை வழ‌ங்க முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி இ‌ந்தா‌ண்டு முத‌ல் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர் எ‌ன்று பள்ளி கல்வித்துறை அமை‌ச்ச‌ர் த‌ங்க‌ம் தெ‌ன்னரசு தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், ப‌த்தா‌ம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக எடுத்து அனைத்து பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 3 மாணவ- மாணவிகளுக்கு பரிசுத் தொகை வழங்கி அவர்களது உயர்கல்வி செலவு முழுவதையும் அரசு ஏற்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது தவிர மெட்ரிகுலேசன் தேர்வில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு முதல் 3 பரிசுகளை அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதையும் முதலமைச்சர் கருணாநிதி ஏற்று, இந்த ஆண்டே அதற்கான பரிசுகளை இன்று வழங்கினார்.

ப‌‌த்தா‌ம் வகுப்பு மற்றும் மெட்ரிகுலேசனை சேர்ந்த 13 மாணவ-மாணவிகள் மொத்தம் ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்தை பரிசுத் தொகையாகப் பெற்றனர். இது தவிர தமிழ்நாடு முழுவதும் அதிக மதிப்பெண் பெற்ற 1000 மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப் பரிசாக லேப்-டாப் அளிக்கும் திட்டம் உள்ளது எ‌ன்று அமை‌ச்ச‌ர் த‌ங்க‌ம் தெ‌ன்னரசு கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்