+2 தே‌ர்‌வி‌ல் முத‌‌லிட‌ம் ‌பிடி‌த்தவ‌ர்களு‌க்கு ரூ.50,000

செவ்வாய், 26 மே 2009 (12:34 IST)
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெறுவோருக்கு த‌மிழக அரசு சா‌ர்‌பி‌ல் அ‌ளி‌க்க‌ப்படு‌ம் பரிசு தொகையை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி, முதலமைச்சர் கருணாநிதி அறிவி‌த்தா‌ர். இதே‌ப்போ‌ல், 2-ம் மற்றும் 3-ம் இடங்களை பெறுவோருக்கும் பரிசு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சாதனை படைத்தவர்களுக்கான பரிசு தொகையை கருணாநிதி வழங்கினார்.

பள்ளிப்படிப்பில் முழுமையாக கவனம் செலுத்தி, கடுமையாக உழைத்து மாநில அளவில் சிறப்பாக தேர்ச்சி பெறும் மாணவ-மாணவியருக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் மாநில அளவில் முதல் இடம் பெறுபவருக்கு வழங்கப்படும் 15 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையை 50 ஆயிரம் ரூபாய் என்று உயர்த்தியும், இரண்டாம் இடம் பெறுபவருக்கு வழங்கப்படும் 12 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையை 30 ஆயிரம் ரூபாய் என்று உயர்த்தியும், மூன்றாம் இடம் பெறுபவருக்கு வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையை 20 ஆயிரம் ரூபாய் என்று உயர்த்தியும் இந்த ஆண்டு முதல் வழங்கப்படும் என முதலமைச்சர் கருணாநிதி நேற்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பினை தொடர்ந்து, 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முத‌ல் இட‌த்தை‌ப் ‌பிடி‌த்த நால்வருக்கும் பரிசு தொகையாக தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளையு‌ம், இர‌ண்டா‌ம் இட‌ம் ‌பிடி‌த்த இர‌ண்டு பேரு‌க்கு தலா 30 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளையு‌ம், 3‌ம் இட‌ம் ‌பிடி‌த்த நா‌ன்கு பேரு‌க்கு தலா 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் என 10 சாதனையாளருக்கும் மொத்தம் 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் கருணாநிதி நேற்று வழங்கி பாராட்டியதுடன், பரிசு பெற்ற மாணவ, மாணவியர் எந்த கல்லூரியில், எந்த பட்டப்படிப்பில் சேர்ந்து படித்தாலும், அதற்குரிய செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என்பதற்கான சான்றிதழ்களையும் வழங்கி, வாழ்த்துகள் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்