இந்தியாவிலேயே ‘காட்சித் தகவலியல்’ (visual communication) கல்வியின் முன்னோடியான சென்னை லயோலா கல்லூரியில் “தேடல்” எனும் ஊடகப் பேரவை 27-07-2011 அன்று தொடங்கப்பட்டது.
FILE
“காட்சித் தகவலியல்” கல்வித் துறை தொடங்கப்பட்டு 46 ஆண்டுகளாக ஊடகத் துறையில் எண்ணிலடங்காத படைப்பாளிகளையும். தொழில் நுட்பக் கலைஞர்களையும், செய்தியாளர்களையும் உருவாக்கிய லயோலா கல்லூரியின் மற்றுமொரு மணி மகுடமாய் முதுகலை ஊடகக்கலைகள் துறை, மாநில மொழியான தமிழ் மொழியில் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு வேறு எந்த மொழியிலும் எந்தக் கல்லூரியிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களின் கலை ஆர்வத்தையும், அறிவையும் ஊக்குவிக்கும் நோக்கத்தில் பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள், செயல் வழிப் பயிற்சிகள், மாற்று ஊடக படைப்பாக்கங்கள், ஊடக கள ஆய்வுகள், பேட்டிகள், விருதுகள் என ஆக்கபூர்வமாக மாணவர்களை மேம்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது தான் “தேடல்” ஊடகப் பேரவை.
“தேடல்” ஊடகப் பேரவையை ஒளியேற்றி தொடங்கி வைத்தவர் மாநில சட்டத் துறை மற்றும் செய்தி விளம்பரத் துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் அவர்கள். மிக சமீபத்திய தேசிய விருதுகளை வென்ற மைனா மற்றும் தென் மேற்கு பருவக்காற்று திரைப்படங்களை இயக்கிய பிரபு சாலமன், சீனு ராமசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்து கருத்துரை வழங்கினார்கள்.
தென் மேற்குபருவக்காற்று பட இயக்குனர் பேசுகையில் “வெள்ளைகாரன் கக்குற எச்சியை உள்ளங்கையில் வாங்கி ஏண்டா மோந்து பாக்குற” என்று தற்போது வெளிவரும் கமர்சியல் படக் கதைகளை சாடினர். மற்றும் வெற்றிப்பட இயக்குனர்கள் படம் என்று வெளிவரும் படங்களில் வன்முறையும் காமமும் பிரச்சாரம் செய்யப்படும் போது என்னுடைய படங்களில் மண் வாசனையும் மண்ணின் மைந்தர்களையும் நான் ஏன் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று வினவினார்.
மேலும் விழாவினை துவக்கி வைத்த அமைச்சர் செந்தமிழன் கல்லூரிகளில் “சினிமா ரசனைகல்வியை” பாடத்திட்டமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.
லயோலா கல்லூரி “தேடல்” ஊடகப் பேரவை சார்பாக தேசிய விருதுகளை வென்ற மைனா திரைப்பட இயக்குனர் பிரபு சாலமன் அவர்களுக்கு “பண்பாட்டு இயக்குனர்” எனும் பட்டமும், தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தை இயக்கிய சீனுராமசாமி அவர்களுக்கு “மக்கள் இயக்குனர்” எனும் பட்டமும் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
“தேடல்” ஊடகப் பேரவை துவக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள், லயோலா கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் பி. ஜெயராஜ், கல்லூரி அதிபர் ஆரோக்கியசாமி. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பேராசிரியர் சாரோன் செல்வக்குமார்.