டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முடிவு இன்று வெளியாகும்

செவ்வாய், 23 ஜூன் 2009 (12:29 IST)
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல் நிலைத்தேர்வு முடிவுகள் இன்று அல்லது நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பணியில் துணை கலெக்டர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஆகிய பதவிகளில் 84 காலி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல் நிலைத்தேர்வு நடந்தது. தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

விடைத்தாள்கள் திருத்தப்பட்டு தேர்வு முடிவு தயார் நிலையில் உள்ளது. தேர்வு முடிவு நேற்று வெளியிடப்படும் என்று தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் மத்தியில் தகவல் பரவியது. ஆனால், இரவு 8 மணி வரை தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) அல்லது நாளை தேர்வு முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய குரூப்-1 தேர்வை விட இந்தாண்டு குரூப்-1 தேர்வில் காலி இடங்கள் குறைவாக உள்ளதால் கட்-ஆஃப் மார்க் கடந்த தேர்வைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும் என்று தெரிகிறது. முதல் நிலைத்தேர்வு முடிவை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் காணலாம். முதல் நிலைத்தேர்வில் வெற்றி பெறுவோருக்கு அடுத்த கட்ட தேர்வு நடத்தப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்